உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மது விற்பனை நேரம் நீட்டிப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மது விற்பனை நேரம் நீட்டிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பணம் கட்டி நள்ளிரவு 1:00 மணி வரை மது விற்பனை நேரத்தை நீட்டித்து கொள்ளலாம் என, கலால் துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 560 மதுபான கடைகள் உள்ளன. இந்த மதுக்டைகளில் எப்.எல்-1 எனப்படும் மொத்த மது விற்பனை மதுக்கடைகள், எப்.எல்-2 எனப்படும் சில்லறை மதுவிற்பனை கடைகள் காலை 8:00 முதல் இரவு 11:00 மணி வரை வழக்கம்போல் திறந்து செயல்படுகின்றன. சுற்றுலா பிரிவின் கீழ் உள்ள ஓட்டல்கள், ரெஸ்ட்ரண்டுகள் இரவு 12:00 மணி வரை திறந்திருக்கும். கள்ளு, சாராயக்கடைகள் காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும். புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, மதுகடைக்கடைகளின் நேரத்தை நள்ளிரவு 1:00 மணி வரை பணம் கட்டி நீட்டித்து கொள்ளலாம் என, கலால் துறை அறிவித்துள்ளது. எப்.எல்-1 மற்றும் எப்.எல்-2 மது கடைகள் இரவு 11:00 மணியில் இருந்து 11.30 மணி வரை நேரத்தை அதிகரிக்க 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பாருடன் கூடிய எப்.எல்..,-2 மதுக் கடைகள் நள்ளிரவு 1:00 மணி வரை நேரத்தை பணம் கட்டி நீட்டித்து கொள்ளலாம். இதற்காக 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதேபோல் எப்.எல்.,-2 சுற்றுலா பிரிவில் உள்ள பார்கள் நள்ளிரவு 12:00ல் இருந்து 1:00 மணி வரை விற்பனை நேரத்தை அதிகரிக்க 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.இதர சிறப்பு நிகழ்ச்சியில் நள்ளிரவு 1:00 மணி வரை மது விற்பனை அனுமதிக்கு 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகளை செய்து வரும் ஓட்டல்கள் இதுவரை கலால் உரிமம் இல்லையென்றாலும், புத்தாண்டு மட்டும் சிறப்பு அனுமதி பெற்று விற்பனை செய்யலாம். இதற்காக, அனைத்து துறைகளின் அனுமதியை பெற்று கலால் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை