முன்னாள் மாணவர்கள் மாலை நேர சிற்றுண்டி வழங்கல்
புதுச்சேரி: சாரம் எஸ்.ஆர்.எஸ்.அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் மாலை நேர சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி, சாரம் எஸ்.ஆர்.எஸ். அரசு உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பள்ளியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, 4வது ஆண்டாக, பள்ளியில் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் 40 மாணவ, மாணவிகளுக்கு ஒரு மாத காலத்திற்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் சேவை நேற்று துவங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார். முன்னாள் ஆசிரியர்கள் அண்ணாமலை, அமுதா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று படிப்பின் அவசியம் மற்றும் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர். இதில், ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.