உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆந்திரா கல்லுாரி மாணவர் புதுச்சேரி கடலில் மூழ்கி மாயம் 

ஆந்திரா கல்லுாரி மாணவர் புதுச்சேரி கடலில் மூழ்கி மாயம் 

புதுச்சேரி : கிறிஸ்துமஸ் கொண்டாட புதுச்சேரி வந்த ஆந்திரா மாநில கல்லுாரி மாணவர் கடலில் மூழ்கி மாயமானார்.புதுச்சேரி கடற்கரையில் செயற்கை மணல் பரப்பை உருவாக்க கடந்த காங்., கட்சியில் ரூ. 27 கோடியில் இரும்பாலான கூம்பு தலைமை செயலகம் எதிரே கடலில் அமைக்கப்பட்டது. இதன் பிறகு புதுச்சேரி கடல் சூழலே மாறி விட்டது. கடற்கரையில் ஆங்காங்கே சுழல்கள் உருவாகி வருகிறது.இதனால் கடல் அலை சீற்றமாக இருக்கும் சமயம், கடலில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாக மாறி உள்ளது.இந்நிலையில், திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விடுமுறை அளிக்கப்பட்டதால், அக்கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.இ., படிக்கும், ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த வினித் ரெட்டி, 18; சந்தோஷ், 19; மஞ்சு, 18; உள்ளிட்ட 6 மாணவர்கள் நேற்று காலை புதுச்சேரி வந்தனர்.தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கிய 6 பேரும், காலை 10:00 மணிக்கு தலைமை செயலகம் எதிரில் கடலில் இறங்கி விளையாடினர். அப்போது, வினித்ரெட்டி, சந்தோஷ் இருவரும் கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். உடனிருந்த மஞ்சு என்ற நண்பர், சந்தோைஷ மீட்டு, கரைக்கு கொண்டு வந்தார். வினித்ரெட்டியை காப்பாற்ற முடியவில்லை.கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட வினித்ரெட்டி குறித்து கடலோர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.கடலோர காவல்படையினர் ரோந்து படகில் தேடும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினரும் கடலில் இறங்கி தேடி வருகின்றனர்.

ஹெலிகாப்டர் மூலம் தேடல்

கடலில் விழுந்து மாயமான வினித்ரெட்டியை நேற்று மாலை கடலோர காவல்படை (கோஸ்ட் கார்டுக்கு) சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி நடந்தது.

வேடிக்கை பார்த்த போலீஸ்

புதுச்சேரி கடலோர போலீஸ் பிரிவுக்கு ரோந்து படகு இல்லாததால், கடலில் விழுந்த மாணவரை கடலோர போலீசாரால் தேட முடியவில்லை. தலைமை செயலகம் எதிரில் கடலோர போலீசார் கரையில் நின்று தீயணைப்பு மற்றும் கடலோர காவல்படையினர் தேடும் பணியை வேடிக்கை பார்த்தனர்.

6 ஆண்டுகளில் 75 பேர் பலி

கடந்த ஆண்டு டிச. 31ம் தேதி புத்தாண்டு கொண்டாட கடற்கரை வந்த நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவிகள் 2 பேர், மாணவர்கள் 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். கடந்த 6 ஆண்டுகளில் புதுச்சேரி கடற்கரையில் மட்டும் 75க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர்.அழகிய கடற்கரை ஆபத்தான கடற்கரை என்பது சுற்றுலா பயணிகளுக்கு தெரியவில்லை. சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்கு பல கோடி செலவு செய்யும் அரசு, கடற்கரையில் மெகா சைஸில் இரும்பு பலகையில் கடலில் குளிக்க தடை என்ற அறிவிப்பு பலகையும், அதில் கடலில் மூழ்கி இறந்தவர்கள் புகைப்படங்களை வைத்தால், சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க யோசிப்பர். இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டம் துவக்கத்திற்கு முன்பே கடலில் மூழ்கி கல்லுாரி மாணவர் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை