புதுச்சேரியில் மேலும் ஒரு கட்சி உதயமாகிறது
சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் பல்வேறு கட்சியிலும் அதிருப்தி நிலவுகிறது. கட்சியை விட்டு விலகி எந்த கட்சிக்கு தாவுவது என தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் ஒன்றாக இணைத்து தனி அணியாக அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என, ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்காக ஒத்த கருத்து உடையவர்களை ஒரே அணியில் திரட்டும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் மக்கள் முன்னேற்ற கழகத்தில் விலகியவர்கள் புதிய கட்சியை துவங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். குறிப்பாக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சேர்மன் வெங்கட்ராமன் தலைமையில் புதிய கட்சியை ஆரம்பித்து சட்டசபை தேர்தலை சந்திக்கலாம் என திட்டமிட்டுள்ளனர். இக்கட்சியை பதிவு செய்வது, புதிய நிர்வாகிகளை நியமிப்பது போன்ற பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. எனவே வரும் சட்டசபை தேர்தலில் மேலும் ஒரு புதிய கட்சி புதுச்சேரியில் உதயமாகிறது.