உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு மருத்துவ கல்லுாரியில் 226 செவிலியர் பணி; நவ.,6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவ கல்லுாரியில் 226 செவிலியர் பணி; நவ.,6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி : இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 226 செவிலிய அதிகாரி பணியிடங்களுக்கு வரும் நவ., 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி இயக்குநர் உதயசங்கர் செய்திக்குறிப்பு: புதுச்சேரி, கதிர்காமத்தில் இயங்கி வரும் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரியில் காலியாக உள்ள 226 செவிலிய (குருப்-பி) அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதி பி.எஸ்சி., நர்சிங், டிப்ளமோ இன் ஜி.என்.எம்., அல்லது அதற்கு சமமான படிப்பு முடித்து, ஏதேனும் ஒரு மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எம்.பி.சி., ஓ.பி.சி., இ.பி.சி., பி.சி.எம்., பி.டி., பிரிவினருக்கு 3 ஆண்டும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டு வயது தளர்வு உண்டு. இட ஒதுக்கீடு பொது - 90; இ.டபிள்யூ.எஸ்., - 22; எம்.பி.சி., - 40; ஓ.பி.சி.,- 26; இ.பி.சி., 4; பி.சி.எம்., - 5; எஸ்.சி.,- 35; எஸ்.டி.,- 2; பி.டி.,- 2; . இதில் 10 இடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடாக ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு முறை கோவிட்-19 பணியில் ஈடுபட்டவர்களின் கல்வி தகுதி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் ஊக்க மதிப்பெண்களில் பெற்ற மதிப்பெண்களுக்கு வெயிட்டேஜ் கொடுத்து, தேர்வுக்கு அதிகபட்சமாக 120 மதிப்பெண்கள் இருக்கும். இதில் மேல்நிலை படிப்பில் பெற்ற மதிப் பெண்ணில் 50 சதவீதம், நர்சிங் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணில் 50 சதவீதம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நர்சிங் படிப்பு பதிவு செய்த நாளிலிருந்து ஆண்டிற்கு 1.5 மதிப்பெண் வீதம் அதிகபட்சமாக 10 ஆண்டிற்கு 15 மதிப்பெண் வழங்கப்படும். மேலும், கோவிட்-19 காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படும். அரசு நிறுவனங்களில் 100 நாட்கள் முதல் ஓராண்டு வரை பணிபுரிந்தவர்களுக்கு 2 மதிப்பெண், ஒன்றரை ஆண்டு பணி புரிந்தவர்களுக்கு 3 மதிப்பெண், இரண்டாண்டு பணி புரிந்தவர்களுக்கு 4 மதிப்பெண், அதற்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு 5 மதிப்பெண் வழங்கப்படும். இடஒதுக்கீடு விதியை பின்பற்றி, ஒட்டுமொத்த தகுதி பட்டியலில் இருந்து தற்காலிக தேர்வு பட்டியல் மற்றும் ஒரு காத்திருப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு https://igmcri.edu.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இப்பணிக்கான விண்ணப்ப கட்டணமாக எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.125ம், பிற பிரிவினர் ரூ.250 என இயக்குநர், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி, புதுச்சேரி என்ற பெயரில் வரைவோலை எடுக்க வேண்டும். விண்ணப்பங்களை, கல்லுாரி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து வரும் நவ., 6ம் தேதி மாலை 5 மணிக்குள், இயக்குநர், இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், வழுதாவூர் சாலை, கதிர்காமம், புதுச்சேரி--605009 என்ற முகவரியில் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை