வணிக வரித்துறையில் ஆவணங்கள் திருட முயற்சியா? போலீசார் விசாரணை
புதுச்சேரி:வணிகவரித்துறை அலுவலகத்தில் நுழைவு வாயில் கதவு உடைக்கப்பட்ட சம்பவத்தில் ஆவணங்கள் திருட முயற்சியா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, இந்திரா சதுக்கம் அருகே வணிகவரித் துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த துறையின் அதிகாரிகள் வர்த்தக நிறுவனங்கள் கடைகளில் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு முறையாக பில் போடப்படுகிறதா, அதற்காக ஜி.எஸ்.டி., வரி செலுத்தப்படுகிறதா என, சோதனை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று காலை ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்தபோது, அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் இருந்த கதவு கண்ணாடி உடைக்கப்பட்டு கிடந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் ஏதுவும் திருடப்படவில்லை. தகவலறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார், வணிகவரித்துறை அலுவலகத்திற்கு வந்து, உடைந்து கிடந்த கதவு கண்ணாடியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.அதில், ஜி.எஸ்.டி., மற்றும் வருமான வரி தொடர்பான முக்கிய ஆவணங்கள், அலுவலகத்தில் உள்ளது. அந்த ஆவணங்களில் எதைனும் திருடி செல்ல மர்மநபர்கள், வணிக வரித்துறை அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனரா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.