உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி நகரப்பகுதிக்கு கிராமப்புறத்திலிருந்து குடிநீர்: சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்

புதுச்சேரி நகரப்பகுதிக்கு கிராமப்புறத்திலிருந்து குடிநீர்: சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி நகரப் பகுதிக்கு கிராமப்புறத்தில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டம் கண்டிப்பாகச் செயல்படுத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார். புதுச்சேரி மாநிலத்தில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் ஆழத்திற்குச் சென்றுவிட்டது. குறிப்பாக நகர்ப்புறங்களில் விநியோகிக்கப்படும் குடிநீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என்றும், உப்பு நீராகவே உள்ளது என்றும் மக்களும், எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதன் காரணமாக மாற்று குடிநீர் திட்டங்களை அரசு ஆராய்ந்து வருகிறது. ஒருபுறம் கடல் நீரைத் தூய்மையாக்கி குடிநீராக்கும் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வர, மறுபுறம் கிராமப்புறங்களில் இருந்து குழாய்கள் மூலம் நகர்ப் பகுதிக்குக் குடிநீர் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. ஆனால், கிராமப்புற மக்களின் எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் பல ஆண்டுகளாகச் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் இருந்தது. கிடப்பில் போடப்பட்டுள்ள இக்குடிநீர் திட்டம் குறித்து நகர் பகுதி எம்.எல்.ஏ.க்கள் அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். அப்போது பேசிய எம்.எல்.ஏ. ,ஜான்குமார், பிரெஞ்சு அரசு இக்குடிநீர் திட்டத்திற்காக ரூ.534 கோடி வட்டியில்லா கடன் அளித்துள்ளது. ஆனாலும் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. கடல்நீரைக் குடிநீராக்க அதிகச் செலவு செய்வதை விட, 16 ஆயிரம் வீடுகளில் மழை நீர் சேமிப்பு அமைப்பை ஏற்படுத்தினால் கடல்நீர் உட்புகுவதைத் தடுக்க முடியும். தினசரி 35 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தும் நபர்களுக்குக் குடிநீர் வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இதன் மூலம் தண்ணீரைச் சேமிக்க மக்கள் ஆர்வம் காட்டுவர் என்றார். இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்குத் தேவையான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் மற்றும் தரவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு நகரப் பகுதி மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக சிவராந்தம் அருகில் 1,700 அடி ஆழத்திற்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, திருக்காஞ்சி பகுதியில் நீர் சேகரிக்கப்பட்டு நகரப் பகுதிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகள் சற்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனினும், மேலடுக்கில் உள்ள நீர் விவசாயத்திற்குப் போதுமானது என்றும், 1,700 அடி ஆழத்திற்குச் கீழ் உள்ள தண்ணீர் எப்போதுமே வற்றாது என்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே கிராமப்புறங்களில் இருந்து நகர பகுதிக்கு குடிநீர் கொண்டு வரப்படும். ஏற்கனவே பல இடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் உள்ளன. அவை தண்ணீரை ரீசார்ஜ் செய்கின்றன. மேலும் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு நீர்நிலைகளில் தண்ணீர் சேமிக்கப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார். காவிரியில் இருந்து விவசாயத்திற்குத் தண்ணீர் கேட்கும் நாம், புதுச்சேரியின் உள்ளே இருக்கும் நகர்ப் பகுதிக்குத் தண்ணீர் கொடுக்க எதிர்ப்பு தெரிவிப்பதா? புதுச்சேரி நகரப் பகுதிகள் என்ன பாகிஸ்தானிலா இருக்கின்றன? என்ற கேள்வி நகரப் பகுதியில் எழுந்திருந்தது. இந்நிலையில், கிராமப்புறத்தில் இருந்து நகர்ப் பகுதிக்குக் குடிநீர் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதால், இத்திட்டம் தற்போது மீண்டும் புத்துயிர் பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்