உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  உஷாரய்யா உஷாரு.... அடையாளத்தை கொடுத்து ஆபத்தில் சிக்கும் புதுச்சேரி கல்லுாரி மாணவர்கள்

 உஷாரய்யா உஷாரு.... அடையாளத்தை கொடுத்து ஆபத்தில் சிக்கும் புதுச்சேரி கல்லுாரி மாணவர்கள்

புதுச்சேரி கல்லுாரிகளில் இப்போதெல்லாம் அவசரத்திற்கு வங்கி கணக்கும், சிம் கார்டு கேட்பது பேஷனாகி வருகிறது. ரூ.1,500 தரேன் நண்பா... சீக்கிரமாக ஒரு வங்கி கணக்கும், ஒரு சிம் கார்டு மட்டும் வாங்கி கொடுத்துவிட்டு போ.. என, சர்வ சாதாரணமாக கேட்கின்றனர். இப்படி வங்கி கணக்கு ஆரம்பித்து கொடுத்த பல மாணவர்களின் வாழ்க்கை இப்போது தலைகீழாக மாறி சிறையில் தள்ளி இருக்கிறது என, எச்சரிக்கின்றனர் சைபர் கிரைம் போலீசார்.. இப்போது கூட இப்படி வங்கி கணக்கும், சிம் கார்டும் வாங்கி கொடுத்த புதுச்சேரியை சேர்ந்த நான்கு இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களை கொத்தாக பிடித்து காலாப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது: சைபர் மோசடி கும்பல்கள் நேரடியாக எந்த வங்கி கணக்கையும் துவங்குவது இல்லை. மொபைல் எண்களையும் வைத்துக் கொள்வதில்லை. இங்கு தான் கல்லுாரி மாணவர்களை ஆசையை துாண்டி, மூளை சலவை செய்து அவர்கள் மூலமாக வங்கியில் அக்கவுண்ட்டை ஆரம்பிக்க வைக்கின்றனர். கல்லுாரி மாணவர்கள் ஒருவர், ஒரு வங்கி கணக்கு ஆரம்பித்து, அவரது பெயரிலேயே ஒரு சிம் கார்டு வாங்கி கொடுத்தால் 1,500 ரூபாய் தருவார்கள். இந்த சொற்ப காசுக்கு ஆசைப்பட்டு தான் கல்லுாரி மாணவர்கள் வங்கி கணக்கு ஆரம்பித்து கொடுக்கின்றனர். ஆனால் அதன் பின்னணியில் இருக்கும் ஆபத்து தெரிவதும் இல்லை. உணர்வதும் இல்லை. இந்த வங்கி கணக்குகள், சிம்கார்டுகள் துாரத்திலுள்ள இருண்ட அறைகளில் இருந்து நடத்தப்படும் லட்சக்கணக்கான மோசடிகளின் கருவிகளாக மாறுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களின் பணம் கடற்கரை அலை போல சில நிமிடங்களில் சீனா, தைவான், கம்போடியா, துபாய், பாகிஸ்தான் என வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. அதன் பின், அது கிரிப்டோ கரன்சியாக மாறி கைகளின் தடம் தெரியாமல் போகிறது. ஆனால் புகார் வந்ததும், சைபர் கும்பல் பிடிபடுவதில்லை. சிக்குவது யார் தெரியுமா.. அந்த கணக்கைத் திறந்த மாணவரே.. அவர் தான் குற்றவாளி… அவர் தான் மோசடி செய்தவர்… அவரின் பெயரில் தான் கணக்கு… அவரின் பெயரில் தான் சிம் கார்டு… அந்த 1,500 ரூபாய் இன்று ரத்தக் கண்ணீராக மாறுகிறது. இப்படி 270 வங்கி கணக்குகள் புதுச்சேரி கல்லுாரி மாணவர்கள் மூலம் துவங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த நான்கு பி.டெக்., மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரு மொபைல் சிம், ஒரு வங்கி கணக்கு திறப்பது... இந்தச் சிறு தவறே அவர்களின் எதிர்கால கனவுகளின் கதவை பூட்டிவிட்டது. காசு வேணும், புதிய மொபைல் வாங்கணும், செலவுக்கு கையில பணம் இல்லை. சிரமமாக இருக்கு என சிறு சிறு தேவைகளுக்காக அவசரத்தில் அவர்கள் தங்களுடைய முக்கியமான ஆவணங்களையும் அடையாளத்தையும் அறியாத கைகளில் ஒப்படைக்கிறார்கள். இது தான் சிக்கல். வங்கி கணக்கு, சிம் கொடுத்தால் பணம் கிடைக்கும்… ஆனால் வாழ்க்கையே போய்விடும். எனவே கல்லுாரி மாணவர்களே உஷாராக இருக்க வேண்டும். வெறும் 1,500 ரூபாய்க்காக சைபர் மோசடிக்கும்பலின் கருவியாக மாற வேண்டாம். எதிர்காலத்தின் கதவை நீங்களே பூட்டிக்கொள்ளாதீர்கள்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ