புதுச்சேரி : புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்த தேசிய வாக்காளர் தின விழாவில் சிறந்த தேர்தல் அதிகாரிகளுக்கு விருது வழங்கப்பட்டது.தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா வழங்கி பாராட்டினார். சிறந்த ஓட்டுப் பதிவு அதிகாரி
கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதிக்களுக்கான தேர்தல் பதிவு அதிகாரி யஸ்வந்தையாவிற்கு வாக்காளர்களை உடனுக்குடன் பதிவு செய்து, பிழையின்றி வாக்காளர் பட்டியலை பராமரித்ததற்கான, அவரின் முயற்சியை பாராட்டி சிறந்த ஓட்டுப் பதிவு அதிகாரி விருது வழங்கப்பட்டது. உதவி ஓட்டுப் பதிவு அதிகாரிகள்
விழாவில், காலாப்பட்டு உதவி ஓட்டு பதிவு அதிகாரி கார்த்திகேயன், தெற்கு காரைக்கால் உதவி ஓட்டுப் பதிவு அதிகாரி மதன்குமார் ஆகியோருக்கு சிறந்த உதவிப் ஓட்டு பதிவு அதிகாரி விருது வழங்கப்பட்டது.அந்தந்த ஓட்டுச்சாவடியில் ஆதார் எண்ணுடன் புகைப்பட வாக்காளர் அட்டையை இணைப்பதில் செய்த பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டது. சிறப்பு விருது
தேர்தல்களில் கடந்த 20 ஆண்டுகளாக ஆற்றிய தகவல் தொழில்நுட்பம் தொடர்பான செயல்பாடுகளை பாராட்டி புதுச்சேரி கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகத்தை சேர்ந்த உதவியாளர் அப்துல் ரகுமான், மேல்நிலை எழுத்தர் விஜயபாலு ஆகியோருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. நிலைய அலுவலர்கள் விருது
தகுதியுடைய வாக்காளர்களை அந்தந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் கணேசன், திருமூலநாதன், கல்பனா, ஜெயஸ்ரீ, லீமாமேரி, மாறன், விக்னேஷ், வளர்மதி, மகேஸ்வரி, விமலா, சுனில்பாபு, வம்சிகிருஷ்ணா ஆகியோருக்கு சிறந்த ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் விருது வழங்கப்பட்டது. கல்வி குழும விருது
தகுதியான வாக்காளர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த முன்னுதாரணமாக செயல்பட்ட கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரிக்கு சிறந்த வாக்காளர் கல்வி குழு விருது வழங்கப்பட்டது.மேலும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், தேர்தல் செயல்முறை வினாடி வினா, களிமண் பொம்மை போட்டிகளில் வென்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.