இன்று பஸ், ஆட்டோ இயங்காது தொழிற்சங்கங்கள் அறிவிப்பு 2,000 போலீசார் குவிப்பு
புதுச்சேரி : அனைத்து தொழிற்சங்கங்கள், இண்டியா கூட்டணி சார்பில், இன்று நடக்கும் பந்த் போராட்டத்தில் 8 இடங்களில் மறியல் போராட்டம், பஸ், ஆட்டோ உள்ளிட்டவை இயங்காது என, தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.தொழிலாளர்கள், விவசாயிகள், மத்திய அரசை கண்டித்தும், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற்சங்கங்கள், இண்டியா கூட்டணி சார்பில் இன்று (9ம் தேதி) புதுச்சேரியில் 'பந்த்' நடக்கிறது.அதையொட்டி, தொழிற்சங்கங்கள் கூட்டாக புதிய பஸ் நிலையம், அரியாங்குப்பம், வில்லியனுார், பாகூர், மதகடிப்பட்டு, திருக்கனுார், சேதராப்பட்டு, காரைக்கால் ஆகிய 8 மையங்களில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலை, அரசு சார்பு நிறுவனங்கள் வேலை நிறுத்த நோட்டீசை முறைப்படி வழங்கியுள்ளதாக அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், பந்த் போராட்டம் காரணமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவின்பேரில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.