உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொல்லைப்புற நியமனத்தை ஏற்க முடியாது சென்னை ஐகோர்ட்அதிரடி

கொல்லைப்புற நியமனத்தை ஏற்க முடியாது சென்னை ஐகோர்ட்அதிரடி

கொல்லைப்புற நியமனங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த சென்னை ஐகோர்ட், இரண்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி அரசு துறைகளில் கொல்லைப்புறமாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, பொதுப்பணித் துறையில் கருணை அடிப்படையில் வேலை பெற்ற வவுச்சர் ஊழியர்கள் 10 பேர் சென்னை ஐகோர்ட்டில் கோர்ட் அவமதிப்பு வழக்கை கடந்தாண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்தனர்.அதில், கருணை அடிப்படையில் பொதுப்பணித் துறையில் வவுச்சர் ஊழியர்களாக பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்ந்த நாங்கள் பணிநிரந்தரம்செய்யப்படவில்லை.ஆனால், அரசு மருத்துவக் கல்லுாரி உள்பட பல்வேறு துறைகளில் கொல்லைப்புறமாக வந்தவர்கள்பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். கருணை அடிப்படையில் சேர்ந்துள்ள எங்களையும் பணி நிரந்தரம் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, முறையிட்டு இருந்தனர்.இந்த வழக்கு நீதிபதி சுப்ரமணியம் முன், கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, கொல்லைப்புற பணி நியமனம் தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி, இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உள்ள கொல்லைப்புற நியமனத்தை முற்றிலும் ஒழித்து, இரண்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.ஐகோர்ட் உத்தரவிட்டு இரண்டு வாரம் கடந்த நிலையில் இவ்வழக்கு நேற்று முன்தினம் நீதிபதி சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அரசு மருத்துவக் கல்லுாரி உள்ளிட்ட நிறுவனங்களின்கொல்லைப்புற நியமனத்தை ஏன் ரத்து செய்து அறிக்கை தாக்கல் செய்யவில்லை என சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு வழக்கறிஞர், 'கொரோனா காலக்கட்டத்தில் பணிபுரிந்துள்ளனர்; அவர்களை ஒருமுறை பரிசீலிக்க வேண்டும்'என்றார்.கொரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு வெயிட்டேஜ் கொடுக்கலாம். கொல்லைப்புற நியமனத்தை ஒருபோதும் ஏற்க முடியாது என, மீண்டும் அழுத்தமாக பதிவு செய்த நீதிபதி, இரண்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டார்.இதனால்,புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரி உள்பட பல்வேறு துறைகளில் கொல்லைப்புறமாக நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கொல்லைப்புற நியமனத்தில் ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தாததால் அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை