| ADDED : டிச 03, 2025 06:31 AM
வில்லியனுார்: செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ள னர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம், கடந்த 22ம் தேதி வில்லியனுாரில் நடந்தது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் 'சீமான்' செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சீமானுடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தை தொடர்ந்து வெளியேறிய தனியார் தொலைக்காட்சி நிருபரை, சீமானின் ஆதரவாளர்கள் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், சீமான் உள்ளிட்டோர் மீது வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக முத்தியால்பேட்டை சுந்தரபாண்டியன், கடலுார் செல்வம் ஆகியோரை அழைத்து விசாரித்து அனுப்பினர். இவ்வழக்கு தொடர்பாக சீமானை விசாரணைக்கு ஆஜராக வேண்டி சம்மன் அளிக்க கடந்த 25ம் தேதி வில்லியனுார் போலீசார், சென்னை சென்றனர். ஆனால், சீமான் அன்று வீட்டில் இல்லாததால் திரும்பி வந்தனர். இந்நிலையில் சென்னையில் உள்ள சீமா னை இன்று 3ம் தேதி சந்தித்து வரும் 8ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டிய சம்மன் வழங்க வில்லியனுார் போலீசார் சென்னை சென்றுள்ளனர்.