| ADDED : ஜன 20, 2024 05:59 AM
புதுச்சேரி : புதுச்சேரி மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப்பட்ட தாமோதரனுக்கு முதல்வர் ரங்கசாமி பணியாணை வழங்கினார்.புதுச்சேரியின் நான்கு பிராந்தியத்திலும் 28க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.கடந்தாண்டு மார்ச் 1ம் தேதி 19 புதுச்சேரி சிவில் நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப ஐகோர்ட் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏப்ரல் 3ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இந்த பணியிடங்களுக்கு ஜூன் 3ம் தேதி முதல்நிலை தேர்வு, ஆகஸ்ட் 5ம் தேதி முதன்மை தேர்வு, அக்டோபர் 9ம் தேதி வாய்மொழி (வைவா) தேர்வு நடந்தது. இதில் புதுச்சேரியை சேர்ந்த 300 வக்கீல்கள், தமிழகத்தை சேர்ந்த 2 ஆயிரம் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.இதில் மாவட்ட நீதிபதி யாக தேர்வு செய்யப்பட்டுள்ள தாமோதரனுக்கு முதல்வர் ரங்கசாமி பணி நியமன ஆணையினை சட்டசபையில் வழங்கினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டத்துறை செயலர் கேசவன் உடனிருந்தனர்.மீதமுள்ள 15 நீதிபதிகள் பணியிடங்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.