விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் ஊக்கத் தொகை முதல்வர் ரங்கசாமி தகவல்
புதுச்சேரி:புதுச்சேரி அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்ககம் சார்பில், தேசிய விளையாட்டு தினம் மற்றும் கேலோ புதுச்சேரி திருநாள் பரிசளிப்பு விழா கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார். விளையாட்டு மற்றும் இளைஞர் நல செயலாளர் கிருஷ்ணமோகன் உப்பு, சாய் மண்டல தலைவர் கிஷோர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பேசியதாவது:- விளையாட்டை ஊக்குவிப்பது அரசின் கடமை. விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு சொந்தமான இடங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும். பள்ளிக்கூடங்களிலும் கிராமப்புற பகுதிகளிலும் மைதானங்களை அமைக்க அரசு முன்னெடுத்து வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு வசதி வாய்ப்பை ஏற்படுத்தி தருவது அரசின் கடமை. மாணவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக காமராஜர் கல்வி உதவித்தொகை கொடுக்கப்படவில்லை. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் லேப்டாப் கொடுப்பதற்கான டெண்டர் முடிவடைந்துள்ளது. விரைவில் லேப்டாப் வழங்கப்படும்' என்றார்.