பத்திரப்பதிவு கட்டண இணைய சேவை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
புதுச்சேரி: பதிவுத்துறையில் பத்திரப்பதிவிற்கான கட்டணத்தை இணைய வாயிலாக செலுத்தும் சேவையை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.வருவாய்த்துறை கீழ் இயங்கும் பதிவுத்துறையில் பத்திரப்பதிவு, திருமணப்பதிவு, வில்லங்க சான்றிதழ் போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.பதிவுத்துறை சார்ந்த செயல்முறைகளை கணினி மயமாக்குவதிலும், இணையதளம் மூலமாக பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தற்போது பதிவுத்துறையில் திருமண பதிவு, வில்லங்க சான்றிதழ் வழங்குதல், ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்கள் மற்றும் திருமண சான்றிதழ் நகல் போன்ற சேவைகள் இணைய வாயிலாக அளிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பதிவுத்துறையில் பத்திரப்பதிவிற்கான கட்டணத்தை இணைய வாயிலாக செலுத்தும் சேவை புதுச்சேரி கிளையின் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டது.இதன் மூலம் சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்தும் பணி பரிவர்த்தனை அற்ற அலுவலகங்களாக மாற்றப்பட உள்ளன. மேலும் பத்திரப்பதிவு செய்ய வரும் மக்கள் தங்கள் பதிவு கட்டணத்தை நெட் பேங்கிங், யு.பி.ஐ., டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு சேவைகள் மூலம் செலுத்தலாம்.இதனை பத்திரப்பதிவிற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்யும் போதே செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதள சேவையை முதல்வர் ரங்கசாமி, சட்டசபை அலுவலகத்தில் நேற்று துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், வருவாய்த்துறை செயலர் ஆஷிஷ் மாதோராவ் மோரே, கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் பங்கேற்றனர்.மேலும், மாவட்ட பதிவாளர் செந்தில்குமார், பாரத ஸ்டேட் வங்கி புதுச்சேரி முதன்மை உதவி பொதுமேலாளர் அன்புமலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.