அலங்கோலமான சிங்கம் பார்க் ஏமாற்றத்தில் விளையாட வரும் குழந்தைகள்
புதுச்சேரி: ஒருகாலத்தில் குழந்தைகளின் சிரிப்பால் களைகட்டிய 'சிங்கம் பார்க்' இன்று அமைதியும் அவலமும் நிறைந்த இடமாக மாறி நிற்கிறது. கருவடிக்குப்பம் வாய்க்கால் அருகே, புதர்மண்டி அலங்கோலமாகக் கிடக்கும் இந்தப் பூங்காவை பார்த்தவுடன், விளையாட்டு கனவுகளுடன் வரும் குழந்தைகளின் முகத்தில் ஏமாற்றம் படர்கிறது. 2005 ம் ஆண்டு, குழந்தைகளுக்கென ஒரு அழகிய விளையாட்டு உலகை உருவாக்கும் நோக்கில் 'சிங்கம் பார்க்' அமைக்கப்பட்டது. சறுக்கு விளையாட்டுகள், ஊஞ்சல்கள், சுற்று ராட்டினம், அழகிய செயற்கை நீரூற்று, பசுமை புல்வெளி, அமர்வதற்கான இருக்கைகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து, அந்தப் பூங்கா குழந்தைகளின் சொர்க்கமாகத் திகழ்ந்தது. ஆனால் இன்று அந்த உயிர்ப்புக்கு தடம் கூட இல்லை. போதிய பராமரிப்பு இல்லாததால், சிங்கம் பார்க் ஒரு பாழடைந்த இடமாக மாறியுள்ளது. குழந்தைகள் ஆர்வத்துடன் ஏறி சுழலும் சுற்று ராட்டினம் உடைந்து, செயற்கை நீர்வீழ்ச்சி குளத்துக்குள் வீழ்ந்து கிடக்கிறது. சறுக்கு விளையாட்டின் கைப்பிடி சுவர் எந்நேரமும் விழும் நிலையில் இருப்பதால், குழந்தைகள் அருகே செல்லவே அச்சப்படுகின்றனர். ஒருகாலத்தில் மகிழ்ச்சியுடன் ஆடிய ஊஞ்சல்கள் காணாமல் போய், அவற்றின் இரும்புக் கம்பிகள் மட்டும் தனிமையில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.பூங்காவின் அடையாளமாக விளங்கிய சிங்க குகை கூட தன் வலிமையை இழந்து, ஒரு பகுதி முற்றிலும் உடைந்து, உள்ளே இருந்த இரும்புக் கம்பிகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. அலங்காரத்திற்காக அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்று நீண்ட காலமாக செயலிழந்து கிடக்கிறது. குளத்தில் மழை நீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்து, சுற்றுப்புற மக்களின் நலனையே அச்சுறுத்துகிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் நடைபெறாததால், பூங்கா முழுவதும் செடி, கொடிகள் படர்ந்து புதர்மண்டியாக மாறியுள்ளது. பகல் நேரமே இவ்வாறு சீர்கெட்ட நிலையில் இருக்கும் பூங்கா, இரவு நேரங்களில் மேலும் பயமூட்டுகின்றது. மின்விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்த இந்த இடத்தை, சமூக விரோதிகள் திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த பூங்கா தற்போது பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும், பராமரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. தேவையான நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. இதேபோன்ற நிலையில் இருந்த வனத் துறையின் குறிஞ்சி நகர் பூங்கா, வெங்கட்டா நகர் பூங்காக்கள் ஆகியவை பின்னர் உழவர்கரை நகராட்சிக்கு மாற்றப்பட்டபின், சீரமைக்கப்பட்டு மீண்டும் உயிர்ப்புடன் மாறியுள்ளன. அதுபோலவே, சிங்கம் பார்க்-ஐயும் உழவர்கரை நகராட்சிக்கு ஒப்படைத்து, முறையான பராமரிப்பு, பாதுகாப்பு வசதிகள், குழந்தைகளுக்கான புதிய விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றுடன் மீண்டும் புது பொலிவுடன் உயிர்ப்பிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.