உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ரேஷன் கார்டிற்கு கேழ்வரகு மாவு முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

 ரேஷன் கார்டிற்கு கேழ்வரகு மாவு முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: முதியோர் உதவித்தொகை, 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில், வீரதீர குழந்தைகள் தினவிழா கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரியில் நேற்று நடந்தது. விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: குழந்தைகளுக்கு பயமிருந்தால், அவர்கள் செய்கின்ற செயலின் தன்மை குறைந்து விடும். எனவே குழந்தைகளுக்கு வீரதீர கதைகள் சொல்லி வளர்க்க வேண்டும். நாட்டுப்பற்று, மொழிப்பற்று கூறி வளர்த்தால் குழந்தைகள் பயமின்றி துணிச்சலோடு, நல்ல காரியங்களை செய்வார்கள். கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மூலமாக ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு பால், ஆரோக்கியமான உணவு மற்றும் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் முன்னேறிய நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் மோடி தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். அவருக்கு வலு சேர்க்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு ரூ. 50 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அரசின் எந்த உதவியும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கி வருகிறோம். இதனை, 2,500 ஆக வழங்க உள்ளோம். அதே போல், முதியோருக்கு உதவித்தொகை ரூ. 500 உயர்த்தி வழங்க உள்ளோம். குழந்தைகளுக்கு இலவசமாக நல்ல கல்வியை கொடுத்து வருகிறோம். புதுச்சேரியில் பசி, பட்டினியோடு இருப்பதாக யாரும் சொல்ல முடியாது. முதியோர் உதவித்தொகை, இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுகிறது. கோதுமை வழங்குவது போல், ஒரு கிலோ கேழ்வரகு வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. அதனால், அனைத்து ரேஷன் கார்டிற்கும் ஒரு கிலோ கேழ்வரகு மாவு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. புதுச்சேரியில் குழந்தைகள் சிறப்பாகவும், ஆரோக்கியமாவும், வளரும் வகையில், அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தும். குறிப்பாக, விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும்' என்றார். நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், ரமேஷ் எம்.எல்.ஏ., கலெக்டர் குலோத்துங்கன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் முத்துமீனா, சமக்ர சிக் ஷா திட்ட இயக்குநர் எழில் கல்பனா, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் சிவராமன், அரசு மருத்துவக் கல்லுாரி இயக்குநர் உதயசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி