20 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் காங்., ஓ.பி.சி., அணி தலைவர் வலியுறுத்தல்
புதுச்சேரி : வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணியில் காங்., கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என ஓ.பி.சி., அணித் தலைவர் வலியுறுத்தியுள்ளார். அகில இந்திய காங்., கமிட்டி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கள் நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்தார். அவர், காங்., அலுவலகத்தில் கட்சியின் ஒவ்வொரு பிரிவு நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் பணி குறித்து ஆலோசனைகள் கேட்டறிந்தார். அதன்படி நேற்று மாலை நடந்த ஓ.பி.சி., அணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அணி தலைவர் கண்ணன் பேசியதாவது: கட்சியை வளர்ச்சிக்கு பாடுபடும் திறம்பட செயல்படக்கூடியவரை தலைவராக நியமிக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணியில் காங்., கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். மீதி 10 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும். அப்படி இல்லையெனில் நாம் தனித்து போட்டியிட வேண்டும். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் பொருட்டு, தேர்தலுக்கு முன்பாக ஓ.பி.சி., அணி சார்பில் ராகுலை அழைத்து வந்து புதுச்சேரியில் மாநாடு நடத்த அனுமதி பெற்று தர வேண்டும். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை காங்., அலுவலகத்தில் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். கூட்டத்தில் கட்சி தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் துணை சபாநாயகர் பாலன் மற்றும் ஓ.பி.சி., அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.