மழைக்காலங்களில் தொடரும் உயிர்பலி... வௌ்ளம் பெருக்கெடுக்கும் வாய்க்காலில் சென்சார்
பு துச்சேரியில் வற்றாத ஜீவ நதிகளோ, ஆண்டு முழுவதும் எப்போது ஓடிக்கொண்டு இருக்கும் பெரிய ஆறுகளோ இல்லை. தண்ணீரை தேக்கி வைக்க 84 ஏரி, குளங்கள் மட்டுமே உள்ளன. மழைக்காலங்களில் மட்டும் செம்மண் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்படி செம்மண் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் உயிர் பலிகளும் ஏற்படுகிறது.வெள்ளக்காலங்களில் உயிர்பலியை தடுத்திட, பொதுமக்களுக்கு அலர்ட் செய்ய, புதுச்சேரி நகர பகுதியில் உள்ள வாய்க்கால்களை ஒருங்கிணைத்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாய்க்கால்களில் சென்சாருடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டு வருகின்றது. இதற்கான கட்டுப்பாட்டு அறையும் இ.சி.ஆர் நவீன மீன் அங்காடி வளாகத்தில் விரைவில் அமைக்கப்பட உள்ளது.இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த கட்டுபாட்டு கண்காணிப்பு அதிகாரிகள் கூறுகையில், 'ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பேரிடர் அமைப்பிற்காக இந்த சென்சர் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறையின் நீர்ப்பாசன கோட்டம் மொத்தம் 20 வாய்க்கால்களில், சென்சார் பொருத்தி கண்காணித்திட பரிந்துரை செய்துள்ளது.எனவே அந்த 20 வாய்க்கால்களிலும் சென்சாருடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டு, ஒருங்கிணைந்த கட்டுபாட்டு அறையில் இருந்தபடியே மழைக்காலங்களில் கண்காணிக்கப்படும். வாய்க்கால்களில் எவ்வளவு உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது. எங்கு அடைப்பு ஏற்பட்டுள்ளது, எந்த இடங்களில் தண்ணீர் ஊருக்குள் புகுந்து நாசம் செய்கின்றது என்பதை துல்லியமாக கண்காணித்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.