உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குழந்தைகளிடம் தைரியம், தேசபக்தியை வளர்க்க வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு

குழந்தைகளிடம் தைரியம், தேசபக்தியை வளர்க்க வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் வீர குழந்தைகள் தின விழா, கம்பன் கலையரங்கில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீஜெயக்குமார், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அரசு செயலர் நெடுஞ்செழியன், கலெக்டர் குலோத்துங்கன், இயக்குநர் முத்துமீனா கலந்து கொண்டனர்.விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று பேசியதாவது:இந்திய நாடு பல கலாசாரங்கள், மதங்கள், இனங்கள் ஒன்றாக சேர்ந்த நாடு. வீரம், தியாகம், தேச பக்தி, ஒற்றுமையும் நிறைந்தது. இவற்றை வளரும் தலைமுறைக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டியது நம்முடைய கடமை.நம்முடைய பண்பாடு, கடவுள், மதங்கள் எல்லாம் தீமைகளுக்கு எதிராக வீரத்தோடு போராட வேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுக்கிறது. நம்முடைய வரலாறு முழுவதிலும் இதை போன்ற, வீரமும் தியாகமும் நிறைந்த வீரர்களை, வீர பெண்மணிகளை நாம் பார்க்க முடியும். வீரம் நிறைந்த தியாகச் சுடர்களின் வரலாறுகளை நாம் நம்முடைய குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லும் போது அவர்கள் நம்முடைய பண்பாட்டின் பெருமையை புரிந்து கொள்வார்கள். தேசபக்தி உணர்வோடு நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவார்கள். இந்த சமுதாய கடமையில் இருந்து நாம் தவறி விடக்கூடாது. வீரப் பண்பு ஏற்கனவே குழந்தைகளுக்குள் புதைந்து கிடக்கிறது. ஒவ்வெரு குழந்தையின் உள்ளே இருக்கும் இந்த வீரப்பண்பை பற்றி மற்ற குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். கதைகள் மூலமாக, படங்கள் மூலமாக, உங்களுக்கு தெரிந்த ஆரோக்கியமான வழிகளில் குழந்தைகளிடம் தைரியம், தன்னம்பிக்கை, தேசபக்தியை வளர்க்க வேண்டும்.இவ்வாறு கவர்னர் பேசினார்.

காத்திருந்த கவர்னர்

விழாவில் பங்கேற்க கவர்னர் கைலாஷ்நாதன் வந்தபோதிலும் முதல்வர் ரங்கசாமி வர காலதாமதம் ஆனது. அதை தொடர்ந்து முதல்வர் வருவதற்குள் தான் பேசி விடுவதாக தெரிவித்த கவர்னர், அதன்படி மேடை ஏறி பேசி முடித்தார். 45 நிமிடங்கள் கழித்து வந்த முதல்வர் ரங்கசாமி, வேறு விழாவில் பங்கேற்றதால் வர காலதாமதம் ஆனதாக கூறி, அதன் பிறகு தலைமையுரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ