உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சைபர் கிரைம் போலீசார் தொடர் விழிப்புணர்வு; ஆன்லைன் பட்டாசு மோசடி குறித்து 2 புகார் மட்டுமே வந்தன

சைபர் கிரைம் போலீசார் தொடர் விழிப்புணர்வு; ஆன்லைன் பட்டாசு மோசடி குறித்து 2 புகார் மட்டுமே வந்தன

புதுச்சேரி: சைபர் கிரைம் போலீசாரின் தொடர் விழிப்புணர்வு காரணமாக ஆன்லைன் பட்டாசு மோசடி குறைந்து, இந்தாண்டு 2 புகார் மட்டுமே வந்தாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலில் செல்லாமல், வீடுகளுக்கே பொருட்கள் வருவதால், ஆன்லைன் வர்த்தகத்தை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குறைந்த விலையில் பட்டாசுகளை வாங்க அதிக அளவில் பொதுமக்கள் ஆன்லைனில் தேடுவது வழக்கம். அதனை பயன்படுத்தி, சைபர் மோசடி கும்பல்கள் வாட்ஸ் ஆப், இன்ஸ்டா கிராம், பேஸ்புக் உள்ளிட்டவைகளில்பிரபலமான பட்டாசு விற்பனையாளர்கள் பெயரில் போலி வலைத்தளங்களை உருவாக்கி, போலியான விளம்பரங்களை பதிவிடுகின்றனர். அதனை நம்பி, குறைந்த விலைக்கு ஆன்லைனில் பட்டாசுகளை வாங்க பல லட்சம் வரை பணத்தை செலுத்தி, பொதுமக்களுக்கு மோசடி கும்பலிடம் இழந்து வருவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் ஆன்லைனில் பட்டாசு உள்ளிட்ட எந்தவித பொருளையும் வாங்கும் முன், அதன் நம்பகத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். விளம்பரத்தாரர்களின் முழு விவரங்களையும் சரி பார்த்த பின்னரே பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும். ஆன்லைன் விளம்பரங்களை மட்டும் நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் பொது மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, எச்சரிக்கை விடுத்தனர். இதற்கு, கைமேல் பலனாக இந்தாண்டு ஆன்லைன் பட்டாசு மோசடி தொடர்பாக 2 புகார்கள் மட்டுமே புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாருக்கு வந்துள்ளது. அதிலும், ஆன்லைனில் பட்டாசு மோசடியில் போலீஸ்காரர் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது. இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறிகையில்,'கடந்த 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் தீபாவளியின் போது, ஆன்லைன் பட்டாசு மோசடி தொடர்பாக 50க்கும் மேற்பட்டோர் பல லட்சம் ரூபாய் வரை இழந்ததாக புகார்கள் பெறப்பட்டது. ஆனால், இந்தாண்டு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக, ஆன்லைன் பட்டாசு மோசடி வெகுவாக குறைந்து, இரண்டு புகார்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி