| ADDED : பிப் 24, 2024 06:38 AM
புதுச்சேரி: புதுச்சேரி புல்வார்டு நகர பகுதியில் பலவீனமாக உள்ள பாதாள சாக்கடை குழாய்களை மாற்ற பொதுப்பணித் துறை தயாராகி வருகின்றது.புதுச்சேரி நகர பகுதியில் ஒரு நாளைக்கு 57 எம்.எல்.டி., கழிவு நீர் உற்பத்தி ஆகிறது. இவற்றை சுத்தம் செய்து, கடலுக்குள் அனுப்ப லாஸ்பேட்டை, கனகன் ஏரி, திப்புராயப்பேட்டை பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த சுத்திகரிப்பு நிலை யங்கள் கழிவு நீரை கொண்டு செல்ல ஆங்காங்கே ராட்சத டேங்குகள் பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ளன. நகர பகுதியில் குருசுக்குப்பம், புஸ்சி வீதி பொதுசுகாதார உதவி பொறியாளர் கோட்டத்தில் இத்தகைய ராட்சத டேங்குகள் பொருத்தப்பட்டு, அங்கிருந்து திப்புராயபேட்டை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.இருப்பினும், நகரின் பல்வேறு இடங்களில் பாதாளசாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடி வருகிறது. அடிக்கடி கழிவு நீர் அகற்றும் வாகனங்களை சாலையில் நிறுத்தி, அடைப்புகளை சரி செய்வதே பொதுப்பணித் துறைக்கு பெரிய வேலையாக உள்ளது.இதற்கிடையே பாதாள சாக்கடை அடைப்பிற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பொதுப் பணித் துறை பொது சுகாதார கோட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 52 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை தயார் செய்துள்ளது. இதற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித் துள்ள நிலையில், இதற்கான டெண்டர்கள் பணிகளும் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட் டுள்ளன. என்ன சிறப்பு
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'புதுச்சேரி புல்வார்டு பகுதியில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த பாதாள சாக்கடை திட்டம் துவங்கி 40 ஆண்டுகளை கடந்துவிட்டது. இதனால் பாதாளசாக்கடை குழாய்கள் பல இடங்களில் பலவீனமாக உள்ளது. அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. அப்பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது.எனவே இந்த பலவீனமான பாதாளசாக்கடை குழாய்களை கண்டறிந்து மாற்ற முடிவு செய்துள்ளோம். முதலில் நவீன ரோபோக்கள், கேமராக்கள் உதவியுடன் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்கள் ஆராயப்படும். அந்த இடத்தில் கழிவு நீர் அடைப்பு துார்வாரி அகற்றப்படும்.அப்படி துார்வாரும்போது பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய்கள் உடைப்பில் இருப்பது கண்டறியப்பட்டால், இருதயத்திற்கு பைபாஸ் சர்ஜரி செய்வதுபோன்று அந்த இடத்தில் பலவீனமாக உள்ள குழாய்கள் முற்றிலும் அகற்றப்படும்.அந்த இடத்தில் புதிய குழாய்கள் பதிக்கப்படும். இதன் மூலம் புல்வார்டு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் ஆயுட்காலமும் நீட்டிக்கப்படும். இதற்கான டெண்டர் பணிகளை விரைவுப்படுத்தி வருகிறோம்.இதற்கான 52 கோடி ரூபாய் நிதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செலவிடப்பட உள்ளது' என்றனர்.