சூரமங்கலம் ஜெயதுர்கா பள்ளியில் தினமலர்- பட்டம் வினாடி வினா போட்டி
நெட்டப்பாக்கம்: சூரமங்கலம் ஸ்ரீ ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளியில், 'தினமலர்- பட்டம்' இதழ், வினாடி வினா போட்டி நடந்தது. புதுச்சேரி 'தினமலர்- பட்டம்' இதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் பரிசு வெல்'வினாடி வினா போட்டியின் பள்ளி அளவிலான போட்டி சூரமங்லகம் ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் மணி தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி மற்றும் முதல்வர் விஜயாமணி, பள்ளி ஒருங்கிணைப்பாளர் கவிஸ்ரீ முன்னிலை வகித்தனர். பட்டம் வழிகாட்டி பள்ளி ஆசிரியைகள் தைரியலட்சுமி, கலையரசி, பச்சையம்மாள் வாழ்த்துரை வழங்கினர்.போட்டியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான 400 மாணவர்கள் கலந்து கொண்டனர். முதல் நிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வாகினர். இந்த மாணவர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு மூன்று சுற்றுகளாக வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. அதில் மாணவி ஜனனி, நிரஞ்சனா முதலிடம் பிடித்தனர். மாணவி நேசிகா, சுபஸ்ரீ இரண்டாமிடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற இரு அணிகளுக்கும் பதக்கம் மற்றும் பரிசுகளை பள்ளி முதல்வர் விஜயாமணி வழங்கி பாராட்டினார். பள்ளி அளவில் வெற்றி பெற்று முதல் இரு இடங்களை பிடித்த அணியினர் மெகா வினாடி வினா போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.