வெறிநாய் கடி விழிப்புணர்வு பிரசாரம் சுகாதாரத்துறை இயக்குனர் துவக்கி வைப்பு
புதுச்சேரி : வெறி நாய் கடி குறித்த விழிப்புணர்வு ஆட்டோ பிரசாரத்தை, சுகாதார துறை இயக்குனர் செவ்வேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். புதுச்சேரி சுகாதாரம் மற்றும் நலவழித் துறை, மாநில ரேபிஸ் நோய் தடுப்பு திட்டம் சார்பில், உலக வெறி நாய் கடி குறித்து விழிப்புணர்வு ஆட்டோ பிரசாரம் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேல் விழிப்புணர்வு ஆட்டோ பிரசாரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநில சுகாதார இயக்கத்தின் இயக்குநர் கோவிந்தராஜன், உதவி இயக்குநர்கள் சமீனுஷா பேகம், ஆனந்தலட்சுமி, ரகுநாதன், புதுச்சேரி மாநில ரேபிஸ் நோய் தடுப்பு திட்ட அதிகாரி குணேஸ்வரி, மாநில ஒருங்கிணைந்த நோய் தடுப்பு திட்ட அதிகாரி விவேகானந்தா மற்றும் ரேபிஸ் நோய் திட்ட ஆலோசகர் முரளீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்பிரசார வாகனம் புதுச்சேரியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் சென்று வெறி நாய் கடி மற்றும் இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும். இதன் மூலமாக நாய் அல்லது பிற விலங்குகள் கடித்த உடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பொது மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமாக ரேபிஸ் என்ற கொடிய நோயை நம் மாநிலத்திலிருந்து அகற்றிட முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.