பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்டம்
வில்லியனுார்: புதுச்சேரி அரசு சாராய வடி ஆலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் வேலை கேட்டு, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வில்லியனுார் அடுத்த ஆரியபாளையத்தில் அரசு சாராய வடி ஆலை உள்ளது. ஆலையில் கடந்த 2009ம் ஆண்டு 53 ஊழியர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டு, பணி நிரந்தரம் பெற்றனர். தொடர்ந்து 14 ஆண்டுகளாக வேலை செய்துவந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு ஊழியர்கள் 53 பேரையும் பணி நீக்கம் செய்தனர். பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், அரசு சுமூக தீர்வு கண்டு, அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவதற்கான சாத்திய கூறுகள் இருந்தால் 53 ஊழியர்களையும் மீண்டும் பணியில் அமர்த்தலாம் என, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோர்ட்டு உத்தரவை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், நேற்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.