| ADDED : பிப் 22, 2024 06:48 AM
புதுச்சேரி : ஏனாமில் கைது செய்யப்பட்டவர்கள் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் இல்லை என, அக்கட்சியின் மாநில அமைப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.ஏனாமில் சுற்றுலா வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நால்வரை, ஏனாமைச் சேர்ந்த அரதடி போசய்யா உள்ளிட்ட நால்வர் தாக்கினர். ஏனாம் போலீசார் வழக்குப் பதிந்து, அரதடி போசய்யா உள்ளிட்ட மூவரை கைது செய்து சிறை யில் அடைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் தி.மு.க.,வினர் என, புகார் எழுந்தது. இந்நிலையில் தி.மு.க., புதுச்சேரி மாநில அமைப்பாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கை;ஏனாமில் சுற்றுலா பயணிகள் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் யாரும் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் இல்லை. அரதடி போசய்யா தி.மு.க., பெயரில் போராட்டம் நடத்துவதாக கடந்த மாதம் ஒரு தகவல் வந்தது. அப்போது, ஏனாம் தொகுதிக்கு தி.மு.க., சார்பில் செயலாளர், பொறுப்பாளர் நியமிக்கப்படவில்லை.தி.மு.க., பெயரை சொல்லி, பொறுப்பாளர் என கூறி கட்சி கொடியை யாரேனும் பயன்படுத்தினால் கட்சியினராக இருந்தால் ஒழுங்கு நடவடிக்கையும், தி.மு.க., அல்லாதவர் பயன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கையாக ஏனாம் ஊடகத்துறைக்கு தகவல் தெரிவித்து இருந்தேன்.அதனால் ஏனாமில் கைது செய்யப்பட்டவர் தி.மு.க.,வை சேர்ந்தவர் இல்லை.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.