புதுச்சேரி: 'நெல்லித்தோப்பு தொகுதியில் வினியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தை மேம்படுத்த வேண்டும்' என, தி.மு.க., நிர்வாகிகள் மனு அளித்தனர்.பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணனிடம், நெல்லித்தோப்பு தொகுதி தி.மு.க., பொறுப்பாளரும், பொதுக்குழு உறுப்பினருமான கார்த்திகேயன் தலைமையில் தி.மு.க., நிர்வாகிகள் அளித்த மனு:நெல்லித்தோப்பு தொகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீரில் 'பிஎச்' எனப்படும் கார அமிலத்தன்மையின் அளவு குறைவாக உள்ளது. அதே சமயம், குடிநீரில் 'டிடிஎஸ்' அளவு, உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவையும் மீறி அதிகமாக உள்ளது.இதன் காரணமாக, குடிநீர் அதிக உப்புத்தன்மை கொண்டதாகவும், குடிக்க முடியாததாகவும் உள்ளது. இதனால், பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, குடல் தொற்றுகள், தோல் அரிப்பு மற்றும் ஒவ்வாவை, சிறுநீரகப் பிரச்னை, மலச்சிக்கல், நீரிழப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படுகிறது.எனவே, குடிநீரின் தரத்தை உடனடியாக மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.தொகுதி தி.மு.க., செயலாளர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் வேலவன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் கிருபாசங்கர், தகவல் தொழில்நுட்ப அணி அருண், தொண்டர் அணி கருணாகரன் மற்றும் கிளைச் செயலாளர்கள் உடனிருந்தனர்.