சுடுகாட்டு பாதை கேட்டு முதியவர் பிணத்துடன் மறியல்
புதுச்சேரி: பெருங்களூர் கிராமத்திற்கு சுடுகாட்டு பாதை கேட்டு, முதியவர் பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.வில்லியனுார் கொம்யூன் மங்கலம் தொகுதிக்குட்பட்ட பெருங்களூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராம சுடுகாட்டிற்கு செல்லும் பாதை, விழுப்புரம் - நாகப்பட்டினம் பைபாஸ் அமைக்கும் பணியின் போது அடைக்கப்பட்டது.இதையடுத்து, பெருங்களூர் கிராமத்திற்கு அடைக்கப்பட்ட சுடுகாட்டு பாதையை மீண்டும் அமைத்துதர வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை அமைக்கப்படவில்லை.இக்கிராமத்தில் நேற்று இறந்த 75 வயது முதியவர் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல பாதை இல்லாததை கண்டித்தும், சுடுகாட்டிற்கு உடனடியாக பாதை அமைத்துதர வலியுறுத்தியும், மதியம் 3:00 மணி அளவில் விழுப்புரம் - நாகப்பட்டினம் செல்லும் பைபாஸ் நடுவே முதியவர் பிணத்தை வைத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த வில்லியனுார் தாசில்தார் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இன்று (20ம் தேதி) தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) அதிகாரிகளை அழைத்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.இதையடுத்து, மறியலை கைவிட்டு இறந்தவர் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.