மின்துறை இளநிலை பொறியாளர் தேர்வு: 1415 பேர் பங்கேற்பு
புதுச்சேரி : மின்துறையில் 73 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் 1415 பேர் பங்கேற்றனர். புதுச்சேரி மின்துறையில் 73 இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு 6 மையங்களில் நேற்று நடந்தது. முதல் தாள் தேர்வு காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரையிலும், 2ம் தாள் மதியம் 2:30 மணி முதல் 4:30 மணி வரையிலும் நடந்தது.இந்த தேர்வுக்கு 1,904 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1415 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 489 பேர் வரவில்லை. தேர்வு ஒருங்கிணைப்பாளர் ஆதர்ஷ், துணை தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் கண்ணன், ஜெய்சங்கர் ஆகியோர் தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர். முன்னதாக, தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் நுழைவு சீட்டு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவை சரிபார்க்கப்பட்டு, பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்ட பின், மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். முதல் தாள் தேர்வுக்கு காலை 9:30 மணிக்கும், 2ம் தாள் தேர்வுக்கு மதியம் 2:00 மணிக்கும் நுழைவு வாயில் மூடப்பட்டது. அதன்பின் வந்த தேர்வர்கள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையத்திற்குள் கை பைகள், மொபைல்கள், புளுடூத், ஹெட் போன்கள், பென் டிரைவ் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. முறைகேடுகளை தடுக்க அனைத்து தேர்வு அறைகளிலும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.