உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மண் அரிப்பால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சோரியாங்குப்பம் நடுத்திட்டு விவசாயிகள்

மண் அரிப்பால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சோரியாங்குப்பம் நடுத்திட்டு விவசாயிகள்

சோரியாங்குப்பம் நடுத்திட்டு பகுதியில் உள்ள விளை நிலங்களில் ஏற்பட்ட மண் அரிப்பால், அப்பகுதி விவசாயிகள் வாழ்வதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் நடுத்திட்டு பகுதியில் 30 ஏக்கர் அளவிற்கு மணிலா, மரவள்ளி, கத்தரிக்காய், வெண்டை உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நடுத் திட்டு வயல்வெளி பகுதியில் மண் அரிப்பு காரணமாக யானை பிடிக்கும் அளவிற்கு பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.நிலத்தின் மேல் பரப்பில் இருந்த வண்டல் மண் நீரில் அடித்து செல்லப்பட்டு, மணல் குவிந்து கிடப்பதால், நிலத்தின் தன்மையே மாறி விட்டது. அங்கிருந்த பாசனத்திற்கான 9 போர்வேல் மற்றும் மோட்டார் கொட்டகைகளும், 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு தரை மட்டமானது. இரண்டு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், அப்பகுதி விவசாயிகள் அங்கு எந்த விதமான பயிர்களையும், பயிரிட முடியாத நிலையில் உள்ளனர். அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் 'நிலங்களில் ஏற்பட்ட மண் அரிப்பால், எங்களின் வாழ்வாதாரம் பறியோய் விட்டது. மண் அரிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இதனை தாசில்தாரும், கலெக்டரும் கண்டு கொள்ளவில்லை.கடந்த சில நாட்களுக்கு முன், பாதிப்புகளை ஆய்வு செய்ய, வல்லுனர்கள் குழுவினருடன் வந்த வருவாய் துறை, வேளாண் துறை அதிகாரிகள் சாலையோரம் இருந்த பயிர்களை பார்த்து விட்டு புறப்பட்டனர். இப்படி இருந்தால், உண்மையாக பாதிப்புகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எப்படி தெரிய வரும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும். மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நிலத்தையொட்டி, வெள்ள தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். ஆற்றில் வெள்ள நீரோட்டத்திற்கு தடையாக உள்ள சீமை கருவேல மரங்களையும் அகற்றிட வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை