தீயணைப்பு டிரைவர் டெஸ்ட்; வரும் 23ம் தேதி துவங்குகிறது
புதுச்சேரி ; தீயணைப்பு துறை டிரைவர் பணிக்கான டெஸ்ட் வரும் 23ம் தேதி துவங்குகிறது. நான்கு பிராந்தியங்களை சேர்ந்த 260 பேர் பங்கேற்கின்றனர். புதுச்சேரி தீயணைப்பு துறையில் காலியாக உள்ள தீயணைப்பு டிரைவர் கிரேடு-3 பதவிக்கு ஆன்லைன் வழியாக கடந்த 2022ம் ஆண்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இவர்களுக்கான டிரைவர் டெஸ்ட் கடந்த பிப்ரவரி மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் நிர்வாக காரணங்களால் நடத்தப்படவில்லை. தள்ளி வைக்கப்பட்ட இந்த டிரைவர் டெஸ்ட் போக்குவரத்து ஆய்வாளர்கள் முன்னிலையில் வரும் 23ம் தேதி துவங்கி, அடுத்த மாதம் 8ம் தேதி வரை மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனைய வளாகத்தில்நடக்கிறது.காலை 9:00 மணிக்கு துவங்கும் இந்த டிரைவர் டெஸ்ட்டில் வாகன ஓட்டும் திறமை, அவசர நேரத்தில் வாகன பழுது பார்ப்பு திறன் சோதிக்கப்படஉள்ளது. நான்கு பிராந்தியங்களில் இருந்து மொத்தம் 260 பேர் கலந்து கொள்ள உள்ளனர். புதுச்சேரி பிராந்தியத்தினை சேர்ந்த தேர்வர்களுக்கு வரும் 23, 24, 30, டிச., 1 ஆகிய தேதிகளில் நடக்கிறது. டிச., 7 ம் தேதி காரைக்காலை சேர்ந்தவர்களுக்கும், 8ம் தேதி மாகி, ஏனாம் பிராந்தியத்தினை சேர்ந்தவர்களுக்கும் டிரைவர் டெஸ்ட் நடக்கிறது. இத்தகவலை கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ தெரிவித்துள்ளார்.