புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு மூன்று சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது நாட்டு வெடிகுண்டு வீசியது ஏன்: பரபரப்பு தகவல்கள்
புதுச்சேரி: புதுச்சேரி கோவிந்தசாலை வாஞ்சிநாதன் வீதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே நேற்று முன்தினம் அதிகாலை, நாட்டு வெடிகுண்டு ஒன்று அதிக சத்துடன் வெடித்து சிதறியது.வெடிகுண்டு சத்தம் கேட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, புகை மண்டலமாக இருந்தது.பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். வாஞ்சிநாதன் வீதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, 6 பேர் கொண்ட கும்பல், வாஞ்சிநாதன் வீதி வழியாக பைக்கில் செல்வதும், அப்போது கையில் வைத்திருந்து நாட்டு வெடிகுண்டை சாலையில் வீசி வெடிக்க செய்திருப்பது தெரியவந்தது.போலீசாரின் தொடர் விசாரணையில், நாட்டு வெடிகுண்டு வீசியது கண்டாக்டர்தோட்டம், லோகபிரகாஷ், 19; அவரது கூட்டாளிகள் ஹேமத், 18; குபேர் நகர், விஜயராகவன், 19; மற்றும் 17 வயது சிறார்கள் மூவர் ஈடுப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதில், ஹேமந்த், விஜயராகவன் மற்றும் 3 சிறார்களை பெரியக்கடை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், லோகபிரகாஷ்க்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டிக்கர் மணி இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இதில் லோகபிரகாஷ் உறவினர் மகளை ஸ்டிக்கர் மணி 2 நாட்களுக்கு முன்பு கேலி செய்துள்ளார். லோகபிரகாஷ், ஸ்டிக்கர் மணியை மொபைல்போனில் தொடர்பு கொண்டு, என் தங்கையை ஏன் கேலி செய்தாய் என கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில், ஸ்டிக்கர் மணி, லோகபிரகாஷ்சை கொலை செய்ய திட்டம் தீட்டி வருவதாக தகவல் பரவியது. அதற்கு முன்னதாக ஸ்டிக்கர் மணியை தீர்த்து கட்ட லோகபிரகாஷ் திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது கூட்டாளிகள் மூலம் அரியாங்குப்பம் சென்று பட்டாசுகள் வாங்கி வந்து, அதில் இருந்த வெடி மருந்தை தனியாக பிரித்து எடுத்து நாட்டு வெடிகுண்டு செய்தனர்.18ம் தேதி இரவு முழுதும் ஸ்டிக்கர் மணியை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுடன் சுற்றித்திரிந்தனர். ஸ்டிக்கர் மணி கிடைக்காத விரக்த்தில், லோகபிரகாஷ் கும்பல் வாஞ்சிநாதன் வீதியில் நாட்டு வெடி குண்டை வீசி வெடிக்க செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது தெரிய வந்தது.கைது செய்யப்பட்ட ஹேமந்த், விஜயராகவன் மற்றும் 3 சிறார்கள் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஹேமந்த், விஜயராகன் காலாப்பட்டு சிறைக்கும், 3 சிறார்கள் சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தப்பியோடிய லோகபிரகாசை போலீசார் தேடி வருகின்றனர்.
சிறார்கள் குற்றங்களில் ஈடுபடுவதைதடுக்க தனி கவனம் தேவை
ஆப்ரேஷன் திரிசூல் மூலம் கண்டாக்டர் தோட்டம் பகுதி குற்ற பின்னணி கொண்டவர்கள், ரவுடிகள் வீடுகளில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்துகின்றனர். ஆனால், இதுபோன்று வெடிகுண்டு தயாரித்து கொலை செய்யும் முயற்சி நடப்பது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. தொடர் குற்ற சம்பவம், வெடிகுண்டு தயாரிப்பு உள்ளிட்ட வழக்கில் உள்ள நபர்களால், அப்பகுதி சிறார்களும் அதே பாதையை தேர்வு செய்து செல்கின்றனர்.எனவே, கண்டாக்டர் தோட்டம் அரசு குடியிருப்புகளில் வசிக்கும் குற்றப்பின்னணி கொண்ட ரவுடிகள், நபர்களை அடையாளம் கண்டு, மாவட்ட கலெக்டர் மூலம் குடியிருப்பில் இருந்து ரவுடிகளை வெளியேற்ற வேண்டும் அல்லது அரசு வழங்கிய குடியிருப்பு ஆணையை ரத்து செய்தால், அடுத்து வரும் சந்ததிகள் ரவுடிகளாகவும், வெடிகுண்டு தயாரிக்கும் நபர்களாகவும் உருவாகுவது முற்றிலும் தடுக்கப்படும்.