உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரியில் ஐந்து முனை போட்டி

 புதுச்சேரியில் ஐந்து முனை போட்டி

புதுச்சேரி: புதுச்சேரி, தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்., - காங்., - இ.கம்யூ., - தி.மு.க., - நா.த.க., என, ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்., சார்பில், தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளில் முதல்வர் ரங்கசாமி போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர், தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தட்டாஞ்சாவடி தொகுதிக்கு அடுத்த மாதம் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், என்.ஆர்.காங்., வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க., சார்பில் சேது செல்வம் போட்டியிடுகிறார். அதேபோல், தமிழகத்தில், த.வெ.க., அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் இந்திய கம்யூ., கட்சி சார்பில், அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலர் சலீம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக கார்த்திக் குமாரி களமிறங்குகிறார். என்.ஆர்.காங்., - இ.கம்யூ., - தி.மு.க., - நா.த.க., ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள், தங்கள் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் சார்பாக, தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் விநாயகம் போட்டியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

காங்., வேட்பாளருக்கு த.வெ.க., ஆதரவு

புதுச்சேரியில், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விநாயகம், கடந்த சட்டசபை பொதுத்தேர்தலிலும், இதே தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, த.வெ.க., கூட்டணியில் இடம் பெற்ற, நேயம் மக்கள் கழகம் சார்பில் போட்டியிட்டு, முதல்வர் ரங்கசாமியிடம் தோல்வியடைந்து, இரண்டாம் இடம் பிடித்தார். சில நாட்களுக்கு முன், காங்கிரசில் இணைந்த அவர், தற்போது, காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, புதுச்சேரி காங்., தலைவர் வைத்திலிங்கம் தலைமையில், அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர், சென்னை பனையூரில், த.வெ.க., பொதுச்செயலரும் தமிழக அமைச்சருமான ஆனந்தை சந்தித்தனர். இதையடுத்து, 'தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில், காங்., வேட்பாளரை, த.வெ.க., ஆதரிக்கும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்