மின்துறை தனியார் மயத்தை கண்டித்து ஊர்வலம் முன்னாள் முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரி மின்துறை தனியார் மயத்தை கண்டித்து வரும் 8ம் தேதி இண்டியா கூட்டணி சார்பில், ஊர்வலம் நடத்தப்படும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். அவர், கூறியதாவது: புதுச்சேரி மாநில காங்., சார்பில், கடந்த 30ம் தேதி வாக்கு திருட்டு மற்றும் என்.ஆர்.காங்., -பா.ஜ.,அரசை கண்டித்து ஊர்வலம் நடத்தப்பட்டது. அதன்பின், 1ம் தேதி பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் மகளிர் அணியினர் காங்., அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தியபோது, ராகுலை தரக்குறைவாக விமர்சனம் செய்தும், அவரது உருவபடத்தை எரித்தும் எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து பெரியக்கடை போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசும், பா.ஜ., கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாகவே போலீஸ் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. இது தொடர்பாக, வரும் 12ம் தேதிக்கு பிறகு, டி.ஜி.பி., அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தப்படும். அடுத்த கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம், கோர்ட் சென்று முறையிடப்படும். மேலும்,இண்டியா கூட்டணி சார்பில், வரும் 8ம் தேதி மின்துறை தனியார் மயத்தை கண்டித்தும், மின்துறை அரசிடமே இருக்க வலியுறுத்தியும் காமராஜர் சிலையில் இருந்து ஊர்வலம் நடத்தப்படும். கவர்னர் சமீப காலமாக பா.ஜ., நிர்வாகிகளை தொடர்ந்துசந்தித்து வருவதில், என்ன பின்னணி இருக்கிறது என்பது தெரியவில்லை. கவர்னர் என்பவர் இந்திய அரசியலமைப்பு சாசனப்படி எந்த அரசியல் கட்சிக்கும், அரசியலுக்கு சம்மந்தம் இல்லாதவர். ஆகையால், கவர்னர் மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நிறைய நிதியை பெற்று மாநில வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.