மாஜி சுகாதார ஊழியர்கள் போராட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஓய்வு பெற்ற சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்கத்தினர் நோயாளி கவனிப்பு படி நிலுவைத் தொகையை வழங்கக் கோரி மத்திய அரசின் ஆணையை அடக்கம் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசு, சுகாதார ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி நோயாளி கவனிப்பு படியை 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் உயர்த்தி ஆணை பிறப்பித்தது. புதுச்சேரி அரசு 6 ஆண்டுகள் காலம் தாழ்த்தி 2023ம் ஆண்டு ஜூன் 1ம் தேதியில் இருந்து மட்டுமே வழங்க ஆணை பிறப்பித்தது. 6 ஆண்டு கால நிலுவைத்தொகை கிடைக்காமல் ஊழியர்கள் பாதித்தனர். இந்நிலையில், மத்திய அரசின் ஆணைப்படி 6 ஆண்டுகால நிலுவை நோயாளி கவனிப்பு படியை உடனே வழங்க வலியுறுத்தி, அரசு ஓய்வு பெற்ற சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்கத்தினர் மத்திய அரசின் ஆணையை அடக்கம் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிஷன் வீதி சம்பா கோவில் அருகே நடந்த போராட்டத்திற்கு, சங்க தலைவர் வெற்றிவேல், பொதுச்செயலாளர் பக்தவச்சலம், பொருளாளர் மோசஸ்புஷ்பராஜ் தலைமை தாங்கினர். பின், மத்திய அரசின் ஆணை பேனருக்கு மாலை அணிவித்து, இறுதி சடங்கு செய்து, மண் பானையை உடைத்து அடக்கம் செய்தனர்.