மாஜி எம்.எல்.ஏ., மனைவி மீது தாக்குதல்
முதலியார்பேட்டையில் சாலை மறியல்புதுச்சேரி: முன்னாள் பா.ஜ., எம்.எல்.ஏ., மனைவியை தாக்கியதை கண்டித்து, பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.முதலியார்பேட்டை, ஜோதி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் முன்னாள் பா.ஜ., எம்.எல்.ஏ.,. இவரது மனைவி மல்லிகா, 61. இவருக்கும், பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதில், மல்லிகா தாக்கப்பட்டார்.தாக்கியவர்களை கண்டித்து பா.ஜ., எம்.எல்.ஏ., அசோக்பாபு தலைமையில், கட்சியினர் மற்றும் மல்லிகாவின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர், முதலியார்பேட்டையில், போலீஸ் ஸ்டேஷன் முன், நேற்று இரவு 9:45 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாக்கியவர்களை கைது செய்யக் கோரி கோஷம் எழுப்பினர்.தகவலறிந்து, வந்த எஸ்.பி., பக்தவச்சலம், மறியல் செய்தவர்களிடம், பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதை ஏற்று இரவு 11:30 மணியளவில் மறியலை கைவிட்டனர். இச்சம்பவம் முதலியார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.