4 லட்சம் அங்கீகாரம் இல்லாத வீடுகளை வரன்முறைப்படுத்த அரசாணை வெளியீடு
புதுச்சேரி : புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாத வீடுகளுக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுத்து வரன்முறைப்படுத்த புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 4 லட்சம் வீடுகளுக்கு விடிவுகாலம் பிறந்துள்ளதுடன் அரசுக்கும் 300 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாமல் பிளாட்டுகள் போடுவதற்கு கடந்த 2017ம் ஆண்டு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வந்து கடிவாளம் போடப்பட்டது. இதன் மூலம் விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாறுவது கட்டுப்படுத்தப்பட்டது.அதேபோல், அங்கீகாரம் இல்லாத பிளாட்டுகளுக்கு ஒருமுறை வரன்முறை திட்டமும் நடைமுறைப்படுத்தி, அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனால், புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாத மனைகளை காட்டிலும், வீதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள வீடுகளே அதிகம்.மனை நம்முடையாதாக இருந்தாலும் வீடுகளை கட்டுவதாக இருந்தால் பி.பி.ஏ., எனப்படும் புதுச்சேரி நகர அமைப்பு குழுமத்திடம் முழு கட்டடட வரைப்படத்தையும் சமர்ப்பித்து முன் அனுமதி பெற வேண்டும். நகர அமைப்பு குழுமம் ஒப்புதல் பெற்றே பிறகு வீடுகள் கட்ட வேண்டும். ஆனால் பலரும் எப்போது பி.பி.ஏ., அனுமதி கிடைப்பது; நாம் எப்போது நாம் வீடு கட்டுவது என்ற முடிவு வந்து விடுகின்றனர். எனவே பி.பி.ஏ., ஒப்புதல் பெற்று கட்டுவதில்லை. அப்படியே ஒப்புதல் பெற்றாலும் வீதிமுறை மீறல்களிலும் ஈடுபடுகின்றனர். முதல் தளம் கட்ட அனுமதி பெற்றுவிட்டு 3 தளம் வரை கட்டி விடுகின்றனர். இதுவும் விதிமுறை மீறல் தான்.இப்படி அங்கீகாரம் இன்றி கட்டப்பட்ட வீடுகளில் எண்ணிக்கை பெருகி வந்த சூழ்நிலையில் வீட்டு உரிமையாளர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தனர். வீடுகள் மீது வங்கிகளில் அவசரத்திற்கு கடன் வாங்க முடியாமல் திண்டாடி வந்தனர். இந்த அங்கீகாரம் இல்லாத வீடுகளை வரன்முறைப்படுத்த அரசு தனி கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. ஆனால், பல ஆண்டுகளாக அரசு இதில் மவுனமாகவே இருந்து வந்தது.மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தற்போது செவி சாய்த்துள்ள புதுச்சேரி அரசு அங்கீகாரம் இல்லாத வீடுகளை ஒருமுறை திட்டத்தின் கீழ் வரன்முறைப்படுத்த முடிவு செய்து நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.ரெசிடன்சி கட்டடங்களை வரன்முறைப்படுத்த சதுர மீட்டருக்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு கட்டங்கள், மிக்ஸடு பில்டிங்களுக்கு சதுர மீட்டருக்கு 750 ரூபாய், பலமாடி கட்டடங்களுக்கு சதுர மீட்டருக்கு 1,000 ரூபாய் வரன்முறை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் இதுவரை அங்கீகாரம் இல்லாமல் உள்ள அரசு கட்டடங்களை அரசு துறைகள் வரன்முறைப்படுத்தி கொள்ளலாம். இதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. அரசு உதவி பள்ளியும் தனது அங்கீகாரம் இல்லாத கட்டணடங்களை இந்த திட்டத்தின் கீழ், 50 சதவீ கட்டணம் செலுத்தி அங்கீகாரமாக்கி கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் இதுவரை அனுமதி இல்லாமல் வீடு கட்டியவர்கள் தங்களது வீடுகளை வரன்முறைப்படுத்தி பி.பி.ஏ., அங்கீகாரம் பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர விண்ணப்ப கட்டணமாக குடியிருப்பு கட்டடங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். பிற கட்டடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.மேலும் பரிசீலனை கட்டணமாக குடியிருப்பு கட்டடங்களுக்கு 20 ரூபாய், பிற கட்டடங்களுக்கு 50 ரூபாய் சதுர மீட்டருக்கு செலுத்த வேண்டி இருக்கும். ஓரிரு தினங்களில் இந்த திட்டத்தை பற்றி புதுச்சேரி நகர அமைப்பு குழுமம் அறிவிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாமல் உள்ள 4 லட்சம் வீடுகள் வரைமுறைப்படுத்தப்படுவதுடன் புதுச்சேரி அரசுக்கு 300 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.