புதுச்சேரி: முதியோர், மகளிர் ஓட்டுகளை குறி வைத்து, என்.ஆர்.காங்., - பா.ஜ., அதற்கான நலத்திட்ட பணிகளை வேகப்படுத்தி வருகிறது. புதுச்சேரி சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு சில மாதங்களே உள்ள நிலையில் புதுச்சேரி அரசு மக்கள் நல திட்டங்களை வேகப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதியோர், மகளிர் ஓட்டுகளை குறி வைத்து, அதற்கான நலத்திட்ட பணிகளை வேகப்படுத்தி வருகிறது. முதியோர் பென்ஷன் முதல்வர் ரங்கசாமிக்கு பெரிய பலம் முதியோர் பென்ஷன் திட்டம். ஆட்சிக்கு வந்ததும் கடந்த 2021ம் ஆண்டு 500 ரூபாய் உயர்த்தி கொடுத்த முதல்வர் ரங்கசாமி, தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக முதியோர் பென்ஷனை உயர்த்தி கொடுக்க உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் 1,91,616 பேர் முதியோர் பென்ஷன் பெறுகின்றனர். 55 வயது முதல் 59 வயதிற்குட்பட்டவர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், 60-79 வயதினருக்கு மாதம் 2,500 ரூபாய், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் 3,500 ரூபாய் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மாதம் 45.42 கோடி ரூபாய் அரசு செலவழித்து வருகிறது. தற்போது முதியோர் பென்ஷன் தலா 500 ரூபாய் உயர்த்த முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளதால், அதற்கு செயல்வடிவம் கொடுக்க கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட முதியோர் பென்ஷன் மூலம் புதுச்சேரி அரசுக்கு மாதம் 9.58 கோடி ரூபாய் வரை கூடுதலாக செலவாகும். மகளிர் உரிமை தொகை அரசின் எந்த துறைகளிலும் மாதாந்திர உதவித்தொகை ஏதும் பெறாத 21 வயது முதல் 55 வயதுக்குள் இருக்கும் வறுமை கோர்ட்டிற்கு கீழ் உள்ள ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரை 65 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 6.50 கோடி ரூபாய் புதுச்சேரி அரசு செலவழிக்கிறது. இந்த உதவித் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என, முதல்வர் அறிவித்தார். இந்த உதவித் தொகையை உயர்த்தி கொடுக்கவும் தற்போது கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இது அமலுக்கு வரும்போது கூடுதலாக 9.75 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும். மஞ்சள் இல்லத்தரசி அடுத்து எந்த உரிமை தொகையும் பெறாத மஞ்சள் ரேஷன்கார்டு வைத்துள்ள இல்லத்தரசிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் மானிய கோரிக்கையின்போது அறிவித்தார். இதற்கு செயல்வடிவம் கொடுக்க தற்போது கவர்னருக்கு கோப்பு அனுப்பட்டுள்ளது. மஞ்சள் ரேஷன் கார்டுகளை பொருத்தவரை 1 லட்சம் இல்லத்தரசிகள் இருப்பர் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரி அரசுக்கு மாதம் 10 கோடி செலவாகும். இதேபோல் ஒவ்வொரு துறைகளிலும் சட்டசபையில் முதல்வர், அமைச்சர்கள் அறிவித்த புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அப்படியே, இந்த பயனாளிகளின் ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்யவும் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி அரசு காய் நகர்த்தி வருகிறது.