இலவச அரிசிக்கு கவர்னர் ஒப்புதல் அடுத்த வாரம் வழங்க ஏற்பாடு
புதுச்சேரி : இலவச அரிசிக்கான கோப்பிற்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அடுத்த வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. புதுச்சேரியில் கடந்த காங்., ஆட்சியில் இலவச அரிசி திட்டம் நிறுதப்பட்டு, அரிசிக்கான பணம், பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், பணத்திற்கு பதில் அரிசி வழங்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்ற தற்போதைய அரசு, கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் மீண்டும் ரேஷன் கடைகளில் கான்பெட் நிறுவனம் மூலம் இலவச அரிசி வழங்கப்பட்டது. கான்பெட் நிறுவனத்திற்கு இலவச அரிசியை சர்வோ பேக்கேஜ் நிறுவனம் சப்ளை செய்து வந்தது. இந்நிலையில், இலவச அரிசி கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ததாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அரிசி கொள்முதலுக்கு அரசு மறு ஒப்பந்தம் கோரியது. இதன் காரணமாக கடந்த ஜூலை மாதம் முதல் இலவச அரி சி வழங்கப்படாமல் உள்ளது. இலவச அரிசிக்கான டெண்டரில், மத்திய அரசு ஊழியர்களின் கூட்டுறவு நிறுவனமான கேந்திரிய வந்தார் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், கான்பெட் நிறுவனத்திற்கு 61,800 மெட்ரிக் டன் இலவச அரிசியை சப்ளை செய்ய உள்ளது. இந்த கோப்பிற்கு கவர்னர் நேற்று ஒப்புதல் அளித்தார். அதனைத் தொடர்ந்து, அடுத்த வாரத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, விடுபட்ட மாதங்களுக்கான அரிசியையும் சேர்த்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை கான்பெட் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.