உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரியில் விடியற்காலையில் கனமழை

 புதுச்சேரியில் விடியற்காலையில் கனமழை

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று விடியற்காலையில் பெய்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. வங்க கடலில் இலங்கைக்கு தென்கிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதால் தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடந்த 15ம் தேதி முதல் விட்டு விட்டு, மழை பெய்து வருகிறது. கடந்த 16ம் தேதி 4 செ.மீ., மழை பதிவாகியது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை முதல் மழை துாரிக் கொண்டே இருந்தது. இந்த துாரல் அன்று இரவும் நீடித்தது. இந்நிலையில் புதுச்சேரியில் நேற்று விடியற்காலை 5:30 மணி முதல் காலை 8:30 மணிவரை 3.7 செ.மீ., கனமழை கொட்டியது. நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணிவரை 4.76 செ.மீ., அளவு மழை பதிவாகியது. அதேபோன்று காரைக்காலில் 8.3 செ.மீ., மழை பதிவாகியது. நேற்று விடியற்காலையில் கனமழை பெய்ததை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலி ல் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோன்று புதுச்சேரி மத்திய பல்கலை நிர்வாகமும் விடுமுறை அறிவித்தது. நேற்று நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் காலை 9 மணிக்கு பிறகு மழை விட்டபோதிலும், குளிர்ந்த காற்று வீசியது. திடீர், திடீரென மழை துாரியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் 20ம் தேதி வரை கடலில் சூறாவளி காற்று மணிக்கு 35 கி.மி.,வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்