விநாயகர் சதுர்த்தியை எழுச்சி விழாவாக கொண்டாட இந்து முன்னணி ஏற்பாடு
புதுச்சேரி: புதுச்சேரியில் இந்து முன்னணி சார்பில், 41ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று துவங்கி வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை இந்தாண்டு 'நம்ம சாமி, நம்ம கோவில், நாமே பாதுகாப்போம்' என்ற எழுச்சி விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி சாரம் அவ்வை திடலில் இன்று மாலை 6:00 மணிக்கு 21 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து மகா கணபதி ேஹாமத்துடன் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழா குழு தலைவர் குமரகுரு தலைமை தாங்குகிறார். பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் வரவேற்கிறார். ஆனந்த பாலயோகி பவனானி, ஆர்.எஸ்.எஸ்., வட தமிழக துணை தலைவர் செல்வராஜ் ஆசியுரை வழங்குகின்றனர். அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் சிறப்பு பூஜையை துவக்கி வைக்கிறார். இதில், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து கோபக்குமாரின் அறுமுகனம் மிருதங்க இசை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து தினசரி மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜை, கலைநிகழ்ச்சி நடக்கிறது. நாளை 28ம் தேதி மாலை மாதா அமிர்தானந்தமணி சேவா சமிதி பஜன் பக்தி பாடல் மற்றும் சுரேந்திர்குமாரின் கிராமிய கலை நிகழ்ச்சி நடக்கிறது. 29ம் தேதி மாலை ஏ.சி.டி., படைப்பாளர் கலைக்குழுவின் 'கண்ணப்ப நாயனார்' நாடகம், 30ம் தேதி மாலை ஆனந்த பாலயோகி பவனானி மற்றும் தேவசேனா பவனானி மாணவர்களின் யோகா மற்றும் பரதநாட்டியம் நடக்கிறது. இறுதி நாளான 31ம் தேதி விஜர்சன ஊர்வலம் மதியம் 1:30 மணிக்கு சாரம் அவ்வை திடலில் இருந்து துவங்குகிறது. விழா குழு தலைவர் குமரகுரு தலைமை தாங்குகிறார். துரைராஜ் கொடியசைக்க, சமுதாய தலைவர்கள் வடம் பிடித்து விஜர்சன ஊர்வலத்தை துவக்கி வைக்கின்றனர். ஊர்வலம், நேரு வீதி, மகாத்மா காந்தி வீதி, பட்டேல் வீதி வழியாக கடற்கரை சாலையை சென்றடைகிறது. அங்கு மாலை 4:00 மணிக்கு, சாரதா கலா மந்திர் இசை நாட்டியபள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் நடக்கிறது. திரைப்பட இயக்குநர் பேரரசு நிறைவுரையுடன் விழா முடிவடைகிறது.
மதுக்கடைகள் மூட கலால் துறை உத்தரவு
இந்து முன்னணி சார்பில் புதுச்சேரியில் வரும் 31ம் தேதி விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் நடக்கிறது. அதனையொட்டி ஊர்வலம் நடைபெறும் சாரம், காமராஜர் சாலை, நேரு வீதி, மகாத்மா காந்தி வீதி, அதிதி ஓட்டல் சந்திப்பு, எஸ்.வி.பட்டேல் சாலை மற்றும் கடற்கரை சாலை வரை உள்ள அனைத்து வகை மதுக்கடைகளை மூட கலால் துறை உதவி ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.