| ADDED : நவ 21, 2025 05:51 AM
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில், தெரு நாய்களுக்கு உணவளிக்க தேர்வு செய்யப்பட்ட இடங்களில், பொதுமக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என, ஆணையர் சுரேஷ்ராஜ் கூறி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தெரு நாய்களுக்கு, பொது இடங்களில் உணவு அளிப்பதால், அப்பகுதியில் வசிப்பவர்களுக்கும், வாகனங்களில் செல்வோருக்கும் இடையூறுகள், விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுகிறது.இதனை தவிர்க்க பொது இடங்களில், தெரு நாய்களுக்கு உணவளிக்கும் பழக்கத்தை ஒழுங்குபடுத்த நகராட்சிக்குட்பட்ட ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும், பொது மக்களுக்கு பாதிப்பில்லாமல், தெரு நாய்களுக்கு உணவளிக்க பிரத்தியேகமான இடங்களை அடையாளம் கண்டு, அந்த இடங்களில் மட்டுமே உணவளிக்குமாறு அறிவிப்பு பலகைகள் வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, உழவர்கரை நகராட்சி ஒவ்வொரு வார்டிலும் தெரு நாய்களுக்கு உணவளிக்க பிரத்தியேகமான இடங்கள் தேர்வு செய்துள்ளது. அதன் விவரங்கள் நகராட்சியின் இணையதளத்தில் (https://oulmun.in/whatsnew.php) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட இடங்களை அடையாளம் காண்பதற்கு அறிவிப்பு பலகைகள் வரும் வாரத்தில் வைக்கப்படும். தெரு நாய்களுக்கு உணவு அளிக்க தேர்வு செய்யப்பட்ட இடங்களில், பொதுமக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தாலோ அல்லது உணவளிக்க வேறு ஏதேனும் இடங்கள் தெரிந்தாலோ அதனை உழவர்கரை நகராட்சியின் 7598171674 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.