அரசு துறைகளில் ரூ.28.89 கோடி கையாடல் இந்திய கம்யூ., கண்டனம்
புதுச்சேரி : புதுச்சேரி அரசு துறைகளில் ரூ.28.89 கோடி கையாடல் நடந்துள்ளதற்கு, இந்திய கம்யூ., கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில செயலாளர் சலீம் விடுத்துள்ள அறிக்கை: மத்திய தணிக்கை கணக்கு குழுவில் புதுச்சேரி மாநிலத்திற்கான அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது. அதில், மாநில அரசின் மீதான மொத்த கடன் ரூ. 13,084 கோடியாக உயர்ந்திருப்பதும், ரூ.423.61 கோடி பயன்படுத்தாமல் இருப்பதும் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. மக்களுக்கு ரேஷன் கடைகளின் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கவில்லை. தலித் சமூக மேம்பாட்டிற்கான திட்டங்கள் நிறைய உள்ளன. பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் உள்ளன. உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகைகள் வழங்கப்படாமல் உள்ள நிலையில், ரூ. 423. 61 கோடி பயன்படுத்தாமல் உள்ளது என்பது அரசின் நிர்வாக திறமையின்மையையே காட்டுகிறது. மேலும், அரசு துறைகளில் ரூ.28.89 கோடி பணம் கையாடல் நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. நிர்வாக திறமையற்ற, முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசை, இந்திய கம்யூ., வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.