கிராமிய, அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு நேர்காணல்; புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கிறது
புதுச்சேரி ; அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களின் முகவர்களுக்கான நேர்காணல் வரும் 17 ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கின்றது.புதுச்சேரி கோட்ட அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களில் முகவர்களாக செயல்பட விருப்பம் உள்ளவர்களுக்கு, நேர்காணல் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை, நடக்கின்றது.17ம் தேதி காலை 11.00 மணிக்கு புதுச்சேரி நேரு வீதி அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், 18ம் தேதி காலை 11.00 மணிக்கு செஞ்சி துணை அஞ்சலகம், மாலை 3.00 மணிக்கு திண்டிவனம் தலைமை அஞ்சலகம், 19ம் தேதி காலை 11.00 மணிக்கு விழுப்புரம் தலைமை அஞ்சலகம் ஆகிய இடங்களில் இந்த நேர்காணல் நடக்கின்றது. முகவர்களாக சேர விரும்பம் உள்ளவர்கள், தங்களின் வயது, கல்வித்தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றின் ஒரிஜினல் மற்றும் சான்றொப்பம் பெற்ற நகல் சான்றிதழ்கள், ஆதார், பான் கார்டு ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும்.விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன்னாள் இதர ஆயுள் காப்பீட்டின் முகவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவி குழுவினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், வேலை தேடும், சுய வேலைவாய்ப்பில் இருக்கும் இளைஞர்கள் நேரில் வரலாம். தேர்வு செய்யப்பட்ட நபர்கள் முகவர்களாக செயல்பட காப்பு வைப்பு தொகையாக 5 ஆயிரம் ரூபாய், உரிமம் கட்டணம் 150 ரூபாய் செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தற்காலிக உரிமம் உடனே வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.