ஒரு மணி நேரத்தில் 6 பெண்களிடம் 22 சவரன் பறிப்பு; விமானத்தில் தப்ப முயன்ற ஈரானிய கொள்ளையர் கைது
சென்னை : சென்னையில் நேற்று காலை ஆறு பெண்களிடம், 22 சவரன் வரை செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இச்சம்பவங்களில் தொடர்புடைய ஈரானிய கொள்ளையர் இருவர், விமானத்தில் தப்ப முயன்ற போது, கைது செய்யப்பட்டனர். சென்னையில் சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், அடையாறு இந்திரா நகர், கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை, வேளச்சேரி டான்சி நகர் ஆகிய பகுதிகளில், காலை 6.00 மணி முதல் 7.10 மணிக்குள், பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் வயதான பெண்களை குறிவைத்து, 22 சவரன் செயின்களை பறித்துச் சென்றனர். செயின் பறிப்பு நடந்த விதத்தை ஆய்வு செய்ததில், வட மாநில கொள்ளையரின் கைவரிசை என்று தெரியவந்தது. 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தில், கொள்ளையர்கள் விமான நிலையம் நோக்கி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதனால், தனிப்படை போலீசார், 'இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா' நிறுவன விமானங்களில், டில்லி மற்றும் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை செல்ல முயன்ற, உ.பி.,யை சேர்ந்த மார்சிங் அம்ஜத் ஈரானி, 26; ஜாபர் ஈரானி, 26 ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ஈரானிய கொள்ளையர்கள் என்பதும், சென்னையில் வயதான பெண்களை குறி வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களில், ஆந்திர மாநிலம் நெல்லுாரில் இருந்து ரயிலில் தப்ப முயன்ற ஒருவரை பிடித்துள்ளனர்.
யார் இவர்கள்?
கடந்த, 1970களில் ஈரான் நாட்டில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு குடிபெயர்ந்தனர். அவர்களின் வாரிசுகள், ஆந்திரா, கேரளா, தமிழகத்தில் காரமடை, திருப்பத்துார், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.தோற்றத்தில் ராணுவ வீரர்கள் போல இருப்பர். கொள்ளையடிப்பது தான் இவர்களின் பிரதான தொழில். இதனால், இவர்களை ஈரானிய கொள்ளையர் என, போலீசார் அழைக்கின்றனர்.