சார் பதிவாளர் அலுவலகத்தில் லாகின் ஐ.டி., முடக்கம் உழவர்கரையில் பத்திர பதிவு பாதிப்பு
புதுச்சேரி, ; உழவர்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பில் பிரிவு லாகின் ஐ.டி., முடங்கியதால், பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள் அவதிக்குள்ளாகினர். உழவர்கரை, ஜவகர் நகரில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 5 நாள் தொடர் விடுமுறைக்கு பின் நேற்று பத்திர பதிவு செய்ய பலர் ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு பத்திர பதிவு செய்ய குறிப்பிட்ட கால இடைவெளியில் நேரம் ஒதுக்கப்பட்டது. பத்திரம் பதிவு செய்ய பில் பிரிவில், அப்ரூவல் வாங்கிய பின் தான் பதிவு செய்ய முடியும். இந்நிலையில், பில் பிரிவில் வேலை செய்து வரும் சரஸ்வதி என்பவர் கடந்த மாதம் கல்வித்துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு பதிலாக மாற்று நபர் யாரும் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு இதுவரையில் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக, சரஸ்வதி தொடர்ந்து சார் பதிவாளர் அலுவலகத்தின் பில் பிரிவிலேயே பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று பில் பிரிவில் பணியாற்றி வரும் சரஸ்வதியின் லாகின் ஐ.டி.,யை நிர்வாகம் திடீரென முடக்கியது. மேலும், பத்திர பதிவு செய்யும் சர்வரும் 1 மணி நேரத்திற்கு மேல் சரியாக வேலை செய்யவில்லை.இதனால், பவுர்ணமி தினத்தை முன்னிட்டு பத்திர பதிவிற்கு விண்ணப்பித்திருந்த பலரும் நல்ல நேரத்தில் பத்திரம் பதிவு செய்ய முடியாததால் ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.