உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி தலைமை செயலர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவு கோர்ட் அவமதிப்பு வழக்கில் நீதிபதி அதிரடி

புதுச்சேரி தலைமை செயலர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவு கோர்ட் அவமதிப்பு வழக்கில் நீதிபதி அதிரடி

புதுச்சேரி: பாப்ஸ்கோ ஊழியர்கள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதுச்சேரி தலைமை செயலர் உள்ளிட்ட ஐந்து அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிரந்தர ஊழியர்களுக்கு 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சம்பளம் வழங்கவில்லை. பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. அதையடுத்து 120 நிரந்தர ஊழியர்கள், 6 ஓய்வு பெற்ற ஊழியர்கள், 6 இறந்த ஊழியர்களின் குடும்ப வாரிசுகள் ஐகோர்ட்டில் நிலுவை சம்பளம், ஓய்வூதிய பலன்கள் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இவ்வழக்கில் கடந்த 08.07.2024ம் தேதி நிலுவை சம்பளத்தை வழங்க உத்தரவிட்டது. ஆனாலும் பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. அதையடுத்து ஊழியர்கள் அனைவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஸ்டாலின் அபிமன்யூ ஆஜரானார். கடந்த மாதம் 13ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 2018ம் ஆண்டில் இருந்து முழு சம்பளம் வழங்க வேண்டும். இல்லையெனில் தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது. ஆனால் பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு முழு சம்பளமும் வழங்கவில்லை. அதிகாரிகளும் நேரில் ஆஜராகவில்லை. கோர்ட் உத்தரவினை அவமதித்துவிட்டனர் என, வாதித்திட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இளந்திரையன், புதுச்சேரி தலைமை செயலர் சரத் சவுகான், நிதித் துறை செயலர் ஆஷிஷ் மாதோவ்ராவ் மோரே, குடிமை பொருள் வழங்கல் துறை செயலர் முத்தம்மா,இயக்குநர் சத்தியமூர்த்தி, பாப்ஸ்கோ மேலாண் இயக்குநர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் வரும் 24ம் தேதி மதியம் 2:15 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என,உத்தரவிட்டு அன்றைய தேதிக்கு வழக்கினை ஒத்தி வைத்தார். என்ன காரணம் பாப்ஸ்கோ ஊழியர்கள் தொடர்ந்த வழக்கு ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது, பாப்ஸ்கோ ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் நிலுவை சம்பளம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி தலைமை செயலர், நிதி செயலர் 10 கோடியை உடனடியாக ஒதுக்கி கணக்கு மற்றும் கருவூலத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். பாப்ஸ்கோ நிறுவனம் ஊழியர்களின் வங்கி கணக்கு விபரங்களை கணக்கு மற்றும் கருவூலத் துறையிடம் தர வேண்டும். பயனாளிகள் கணக்கில் சம்பளம், ஓய்வூதிய பலன்களை செலுத்த வேண்டும். இந்த பணியை முடித்து 13.08.2025 அன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் நேரில் ஆஜராக வேண்டும் என,ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம், ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 7 மாதம் மட்டுமே நிலுவை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஐகோர்ட் தலைமை செயலர் உள்ளிட்ட ஐந்து புதுச்சேரி அரசு அதிகாரிகளும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு ஐகோர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி