பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் கடலில் இறங்கி போராட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி, பொதுப்பணித்துறையில் 2016ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள், மீண்டும் பணி வழங்கக் கோரி நேற்று 3வது நாளாக கவர்னர் மாளிகையை நோக்கி கண்டன பேரணியில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தலைமையில் 100க்கும் ஊழியர்கள் பேரணியாக காமராஜர் சாலை வழியாக கவர்னர் மாளிகை நோக்கி சென்றனர். அவர்களை பெரியக்கடை போலீசார் ராஜா தியேட்டர் சிக்னல் அருகே தடுத்து நிறுத்தியதால், வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின், ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கேயே சாலையில் அமர்ந்து சங்கு ஊதி கொட்டு அடித்துமறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், போலீசார் மறியலில் ஈடுபட்ட 21 பெண்கள் உட்பட 60 பேரைக் கைது செய்து, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். பின், அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், 3 நாட்களாக போராட்டம் நடத்தியும் இதுவரை அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை எனக் கூறி,அங்கிருந்து நேராகக் கடற்கரைக்கு சென்று, கடலில்இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி இவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், போராட்டத்தைக் கைவிட்டு கடலில் இருந்து வெளியே வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.