சுமை துாக்கும் தொழிலாளி சாவு
பாகூர்: சுமை துாக்கும் தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாகூர் அடுத்த பெரிய ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் முத்து, 45; சுமை துாக்கும் தொழிலாளி . இவர் நேற்று அதிகாலை 2:30 மணியளவில், வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். பின், பெரிய ஆராய்சிக்குப்பத்தில் சாலையோரமாக மாடுகள் கட்டி வைக்கப்பட்டு இருந்த இடத்தில், தலையில் ரத்த காயங்களுடன் விழுந்து கிடந்தார். தகவலறிந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு, பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். அவரது மனைவி சரண்யா, 34, புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து, முத்து மாடுகள் முட்டி இறந்தாரா, குடிபோதையில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வாகனம் மோதி இறந்தாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.