தனியார் பஸ் டிரைவரை வெட்டிய நபருக்கு வலை
திருக்கனுார் : சோரப்பட்டில் தனியார் பஸ் டிரைவரை முன்விரோதம் காரணமாக கத்தியால் வெட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு, டி.வி.மலை ரோட்டை சேர்ந்தவர் முத்துக்குமரன், 26; தனியார் பஸ் டிரைவர். இவருக்கும், சோரப்பட்டை சேர்ந்த சங்கர் முருகன் என்பவருக்கும் இடையே பணம் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.நேற்று முத்துக்குமரன் சோரப்பட்டு பஸ் நிறுத்தத்தில், பயணிகளை பஸ்சில் ஏற்றிக்கொண்டு இருந்தார். அங்கு வந்த சங்கர் முருகன் முன்விரோதம் காரணமாக முத்துக்குமரனை திட்டி, மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்து பகுதியில் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.படுகாயமடைந்த முத்துக்குமரன் மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்தில் சிகிச்சை பெற்றார். அவர், அளித்த புகாரின் பேரில், சங்கர் முருகன் மீது திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.